குன்றத்தூரில் வீடு உடைத்து கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே அம்பேத்கர் நகர், 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரண். இவர் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர், இன்று அதிகாலை 5.30 மணியளவில், குடும்பத்துடன் சரண் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த அனைத்து பூட்டுகளும் உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து சரண் அதிர்ச்சியானார். உள்ளே சென்று பார்த்தார். அங்கு வரவேற்பறையில் வைத்திருந்த எல்இடி டிவி, ஐபேடு மற்றும் செல்போன் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்களை நள்ளிரவில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருமுடிவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார், எந்த நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து, மர்ம நபர்களின் தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்து விசாரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: