பட்டுக்கோட்டை: கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை கத்தியால் குத்திய கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வாட்டாத்திக்கோட்டை அருகே உள்ள மயில்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (எ) தர்மராஜா(40). கார் டிரைவர். இவரது மனைவி அட்சயா(35). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். பி.ஏ பட்டதாரியான அட்சயா, திருச்சி, கோவையில் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து வந்தார். தவெக தலைவர் விஜயின் தீவிர ரசிகை. சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு ஆதரவாக பல பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் திருச்சியில் பணி புரிந்த போது அட்சயாவுக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த வாலிபர் அடிக்கடி மயில்பாளையம் வந்து அட்சயாவை சந்திப்பார். இது தெரிந்ததால், ராஜா மனைவியை கண்டித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலானது. அதில், வீட்டில் கள்ளக்காதலனுடன் மனைவி அட்சயா தனியாக இருக்கும் போது அவரது கணவர் கையும் களவுமாக பிடித்து மனைவியை தட்டி கேட்கிறார். மேலும் வீட்டில் உள்ள அவனை வெளியே வரச்சொல்லுமாறு கூறினார். அந்த நபர் வெளியே வந்ததும் அவரை தாக்கினார். பின் அந்த நபர், வீட்டை விட்டு ஓடுகிறார். இப்படி அந்த வீடியோ முடிகிறது.இதனிடையே ராஜா அழுது கொண்டே பேசும் மற்றொரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், ‘‘தமிழக காவல்துறைக்கு வணக்கம். இன்று என் குடும்பமே அழிந்து போய் விட்டது. என் குழந்தையும் என்னுடன் சேர்ந்து சாகப்போகிறான். என் மனைவியை கத்தியால் கிழித்து போட்டு விட்டு வந்து விட்டேன். இது எல்லாத்துக்கும் காரணம் திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவர் தான். அவனால் எல்லாமே போய் விட்டது என்று வீடியோவில் பேசியுள்ளார். இதுகுறித்து பட்டுக்கோட்டை போலீசார் நடத்திய விசாரணையில், மயில்பாளையத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் ராஜா-அட்சயா தம்பதியிடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்ட ராஜா கத்தியால் அட்சயாவின் வாய், கன்னம், உதட்டில் சரமாரியாக குத்தினார்.
பின்னர் அட்சயாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு மகனை தூக்கி கொண்டு தப்பியது தெரியவந்தது. படுகாயமடைந்த அட்சயா, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் வல்லத்தில் மகனுடன் ராஜா இருப்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் நேற்று வல்லத்துக்கு சென்று அங்கு மகனுடன் பதுங்கியிருந்த ராஜாவை கைது செய்து பட்டுக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
