கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூர் கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன். பழங்குடியின கூலி தொழிலாளியான இவரது மகள் லட்சுமி (15). இந்த சிறுமி, கடந்தாண்டு மார்ச் மாதம் அதே கிராமத்தைச் சேர்ந்த மத்துரப்பா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு, கடந்த மாதம் 29ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு, சிறுமியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி, கடந்த 3ம் தேதி மாலை லட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் கெஞ்சம்மா, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, சிறுமியின் கணவன் மத்துரப்பாவை கைது செய்தனர்.
