* டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த சகோதரன், உறவினர்கள்; பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சி: சிறுமியை காரில் கடத்தி சென்று வாயில் மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு 2 சகோதரர்கள். இதில், ஒருவர் திருநங்கை. திருச்சி கல்மந்தை காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு சிறுமியின் சகோதரரான திருநங்கை சென்றுள்ளார்.
அந்த வீட்டில் மற்ற திருநங்கைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமி சகோதரனை பார்ப்பதற்காக நேற்றுமுன்தினம் மதியம் சென்றுள்ளார். அப்போது, பாக்யா என்ற திருநங்கையை காரில் அழைத்து செல்ல கார் டிரைவர் மாரிசெல்வன் (43) என்பவரும் வீட்டில் இருந்துள்ளார். தொடர்ந்து, சிறுமியுடன் மாரிசெல்வன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். மாலை 5 மணியளவில் கல்மந்தை காலனி வீட்டில் இருந்து 16 வயது சிறுமியை அவர் காரில் அழைத்து சென்றுள்ளார்.
இதையடுத்து, மாலை 6.30 மணியளவில் கீரைக்கடை பஜாரில் சிறுமி போதையில் சுய நினைவின்றி கீழே விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சிறுமியின் சகோதரன் மற்றும் போலீசாரும் அங்கு விரைந்தனர். பின்னர், சிறுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கல்மந்தை காலனியில் உள்ள சிசிடிவி ேகமராக்களில் பதிவான காட்சிகளை சிறுமியின் உறவினர்கள் பார்வையிட்டனர்.
அதில் கார் டிரைவர் மாரிச்செல்வன், சிறுமியை அழைத்து சென்றது உறுதியானது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் மற்றொரு சகோதரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்மந்தை காலனிக்கு சென்று அங்கிருந்த டிரைவர் மாரிசெல்வனை சரமாரியாக தாக்கினார். இதில், மாரிசெல்வனுக்கு தலை, கால், முகத்தில் காயங்கள் ஏற்பட்டது. தகவலறிந்த அப்பகுதி மக்களும் டிரைவரை தாக்கினர். இதனால் பரபரப்பு நிலவியது. உடனடியாக காந்திமார்க்கெட் போலீசார் சென்று மாரிச்செல்வனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாரிசெல்வன், சிறுமிக்கு மதுவை வலுக்கட்டாயமாக கொடுத்து காரிலேயே பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த கார் டிரைவர் மாரிசெல்வன் ஆசை வார்த்தை கூறி, தனது தங்கையை காரில் அழைத்து சென்றார்.
பின்னர், காரில் செல்லும் போது ஜூஸ் கொடுத்துள்ளார். அவர் மயங்கியதும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். தொடர்ந்து கீரைக்கடை பஜாரில் விட்டு சென்றுள்ளார். எனவே மாரிசெல்வன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாரிசெல்வனை நேற்று கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருநங்கைகளுடன் மாரிச்செல்வனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
திருச்சியில் இருந்து வெளியூருக்கு திருநங்கைகள் செல்ல வேண்டும் என்றால் மாரிசெல்வன் தான் அழைத்து செல்வது வழக்கம். கல்மந்தை காலனி வீட்டிற்கு திருநங்கைகள் வருவது வழக்கம். அங்கு, சிறுமியும் அவ்வப்போது செல்வார் என தெரிகிறது. அப்போது, சிறுமியுடன் மாரிசெல்வன் பேசி வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று காரில் அழைத்து சென்றபோது சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது வாயில் மதுவை ஊற்றி பலாத்காரம் செய்ததாக தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவம் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* போதை ஊசி போடப்பட்டதா?
சிறுமியை அழைத்து சென்றபோது காரில் மதுரையை சேர்ந்த திருநங்கைகள் சிலர் இருந்ததாகவும், சிறுமிக்கு போதை ஊசி போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கூட்டு பலாத்காரமா? காவல்துறை விளக்கம்
திருச்சி மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்படவில்லை. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த கார் டிரைவர் மாரி செல்வன், சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த மாரி செல்வன், சிறுமியை காரில் ஏற்றி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கூட்டு பலாத்காரம் எதுவும் இல்லை. கீழக்கரை பஜாரில் உள்ள வீட்டின் அருகே சிறுமியை காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து மாரிசெல்வனை கைது செய்துள்ளனர். முக்கியமாக, இச்சம்பவத்தில் மாரிசெல்வன் மட்டுமே ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
