அமைச்சரவை கூட்டத்தில் விரிவாகவும், விரைவாகவும் ஆலோசனை 75 நிமிடங்களில் 436 திட்டங்களை அலசி ஆராய்ந்தார் முதல்வர் விஜய்: 10 செகன்ட்ல ஒரு திட்டத்தை முழுசா ஆராய்ந்த உலக அதிசயம்!

* இதுவும் ரீல்ஸ் போடுவதற்கு தானா: முதல்வர் ஆலோசனையை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விரிவாகவும், விரைவாகவும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில், கூட்டம் நடந்த மொத்தம் 75 நிமிடங்களில் 436 திட்டங்களை முதல்வர் விஜய் அலசி ஆராய்ந்தது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. ஏனென்றால், கூட்டி கழித்து பார்த்தால் ஒரு திட்டத்துக்கு 10 வினாடி தான் வருது என்பதால் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தவெக ஆட்சி அமைக்க நடத்திய குதிரை வேக குதிரை பேரத்தை போன்று நேற்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்களை குதிரை வேகத்தில் 75 நிமிடத்தில் விரிவாகவும், வேகமாகவும் முதல்வர் விஜய் ஆய்வு செய்தது இப்போது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 10.05 மணிக்கு தொடங்கி 11.20 மணி வரை நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி 15 நிமிட நேரம் நடைபெற்றது. முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விஜய் முதல்வராக பதவியேற்ற உடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்து போட்டார்.

தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளில் 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடுவது, சிங்கப்பெண் திட்டம் ஆகியவை ஆகும். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள குறு விவசாயிகளுக்கு பயிர் கடன் அறிவிப்பை விவசாயிகள் ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அடுத்து, மகளிருக்கான உரிமைத் தொகையை மாதம் 2,500 ரூபாயாக உயர்த்துவது சாத்தியமா, இதுகுறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு தமிழகம் முழுதும் இலவச பேருந்து பயணம், ஆண்டுக்கு 6 சிலிண்டர், ஒரு பவுன் தங்கம், தாய்மாமன் சீர் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் அறிவிப்புகளில், ஏதாவது சிலவற்றை நிறைவேற்ற முடியுமா? தமிழகத்தின் நிதி நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சமீபகாலமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் இரவு நேரம் ஏற்படும் மின்வெட்டு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்த நிலையில், இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டது, அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட தாமதம் ஏன் என்பது குறித்தும் முதல்வர் விஜய் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதில் டிவிஸ்ட் என்னவென்று பார்த்தால் கூட்டம் நடந்த மொத்த நேரமே ஒரு மணி 15 நிமிடம் தான். இந்த நேரத்துக்குள் 436 திட்டங்களை விரிவாகவும், விரைவாகவும் எப்படி அலசி ஆராய்ந்தார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. கணக்கு போட்டு பார்த்தால், 75 நிமிடங்கள் X 60 = 4,500 வினாடிகள். இந்த 4,500 வினாடிகள் ÷ 436 திட்டங்கள் என வைத்துக் கொண்டால் ஒரு திட்டத்துக்கு 10 வினாடிகள் மட்டுமே வருகிறது.

10 வினாடியில் ஒரு திட்டத்தின் தலைப்பை கூட படிக்க முடியாது என்றால், இதில் எப்படி விரிவாகவும், விரைவாகவும் ஆய்வு செய்திருக்க முடியும் என்று நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர். எந்திரன் படத்துல வர்ற சிட்டி ரோபோ கூட இந்த மாதிரி சர்ர்ர்ர்…. சர்ர்ர்ருன்னு இவ்வளவு ஸ்பீடா படிக்காதே, நல்லா வாயில வருது…

என்றும், ஒன்று நம்மள நம்பும் மக்கள் முட்டாள்கள் என நினைப்பா? இல்லை நாங்களே பெரிய முட்டாள் தாங்க.. என்ற வெளிப்படை தன்மையா என்றும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். எந்த ரீல்ஸ் மூலம் ஆட்சிக்கு வந்தார்களோ இப்போது அந்த ரீல்ஸ்களே தவெக ஆட்சியை கலாய்த்து வருவது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* தவறு செய்தால் நடவடிக்கை: முதல்வர் விஜய்
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாக தவெக ஆதரவு பத்திரிகை நிருபர்கள் சிலர் அமைச்சரவை கூட்டத்தில் விஜய் பேசிய பேச்சு என்று ஒரு பேட்டியை கொடுத்தனர்.

அவர்கள் தெரிவித்த தகவலின்படி, முதல்வர் பேசிய பேச்சு வருமாறு: திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும். அமைச்சர்கள் யாரும் நிர்வாக ரீதியாக, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடக்கூடாது.

அமைச்சர்கள் மட்டுமன்றி, அவர்கள் கீழ் பணியாற்றுபவர்களும் எவ்வித தவறுகளும் செய்யாத வகையில் கண்காணிப்பது அமைச்சர்களின் பொறுப்பாகும். ஒருவேளை தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினாராம்.

Related Stories: