குடும்ப தகராறில் கணவர் தந்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்: சைபர் பிரிவு போலீசுக்கு டோஸ் விட்டது நீதிமன்றம்

புதுடெல்லி: குடும்ப தகராறில் கணவன் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில் லக்னோ சைபர் பிரிவு போலீசாருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. குடும்ப தகராறைத் தொடர்ந்து கணவர் கொடுத்த புகாரால் தன்னுடைய செல்போன் எண் முடக்கப்பட்டு விட்டதாகவும், அந்த செல்போன் எண்ணை மீண்டும் பெற்றுத் தருமாறு கோரியும் பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜே.ஜே.முனீர், தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதில் லக்னோ சைபர் பிரிவு போலீசார் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஆய்வு செய்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘‘லக்னோ சைபர் பிரிவு பொறுப்பாளர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் நாங்கள் சற்றும் திருப்தி அடையவில்லை. தேசிய இணைய குற்றப் புகாரளிக்கும் இணையதளம் வாயிலாக பெறப்படும் தரவுகளை முடக்குதல் தொடர்பான ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. செல்போன் எண் நீண்டகாலமாக முடக்கப்பட்டதால் அது வேறு நபருக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனாலும், மனுதாரர் மீண்டும் அந்த எண்ணை பெற தொலைதொடர்பு நிறுவனத்துடன் சைபர் பிரிவு பொறுப்பாளர் இணைந்து செயல்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

Related Stories: