இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்ததாக பேச்சு; நேபாள பிரதமருக்கு எதிராக போராட்டம் வெடித்தது; பதவி விலக கோரி மாணவர்கள் கொந்தளிப்பு: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளி

காத்மண்ட்: இந்தியாவின் நிலப்பரப்பை நேபாளமும் ஆக்கிரமித்துள்ளதாக பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நேபாளத்தின் நாடாளுமன்றத்தில் பிரதமர் பாலேந்திர ஷா ஞாயிறன்று உரையாற்றினார். அப்போது பிரதமர் ஷா, இந்தியா மட்டுமல்லாமல் நேபாளமும் பல இடங்களில் இந்தியாவின் நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்துள்ளது என்று கூறியிருந்தார். பிரதமரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இ பிரதமரின் இத்தகைய கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திங்களன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ஷாவின் கருத்துக்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சபாநாயகர் இருக்கை அருகே சூழ்ந்து முழக்கமிட்டனர்.

அவை உறுப்பினர்கள் அமைதி காக்குமாறும், அவையின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் சபாநாயகர் டோல் பிரசாத் ஆர்யால் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது வேண்டுகோளை உறுப்பினர்கள் ஏற்காமல் தொடர்ந்து முழக்கமிட்டனர். பிரதமர் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெறவேண்டும் என்றும், நாடாளுமன்ற ஆவணங்களில் இருந்து அதை நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அடுத்த அமர்வு வருகிற 8ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தேசிய சபையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பிரதமர் பாலேந்திர ஷா பதவி விலககோரி எதிர்க்கட்சிகளும் மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ‘இறையாண்மையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, பாலன் ஷா ‘தேசவிரோத’ அறிக்கைகளை வெளியிடுவதாகக் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், நேபாள காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த தருண் தல் அமைப்பும் ஒரு அமைதியான கண்டனப் பேரணியை நடத்தியது. பிரதமரின் பொறுப்பற்ற கருத்துக்கள் என்று அவர்கள் கண்டித்தனர்.

மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் எல்லைப்பிரச்னையை தீர்ப்பதில் சீனா மற்றும் இங்கிலாந்தின் தலையீட்டை நேபாளத்தின் பிரதமர் பாலேந்திர ஷா கோரியிருந்தார். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், \\”இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான எல்லைப்பிரச்னையை தீர்ப்பத்தில் மூன்றாம் தரப்பினருக்கு எந்த பங்கும் இல்லை. எல்லைப்பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் கையாளுவதற்காக இரு தரப்பினரும் இருதரப்பு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியா-நேபாள எல்லையில் சுமார் 98 சதவிதம் ஏற்கனவே வரையறுக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா- நேபாள எல்லை பிரச்னை உருவானது எப்படி?
இந்தியா-நேபாளம்-சீனா முக்கூட்டு எல்லைக்கு அருகிலுள்ள இமயமலைப் பகுதியில், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே நீண்டகாலமாக ஒரு எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய இந்தப் பகுதி சுமார் 370 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் கலாபானி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த லிபுலேக் கணவாய் மற்றும் லிம்பியாதுரா ஆகியவை அடங்கும். ஆங்கிலோ-நேபாளப் போருக்குப் பிறகு நேபாள மன்னருக்கும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே 1816ல் கையெழுத்திடப்பட்ட சுகௌலி உடன்படிக்கையில் இருந்து சர்ச்சை தொடங்கியது. அந்த உடன்படிக்கை காளி நதியை நேபாளத்தின் மேற்கு எல்லையாக அடையாளம் காட்டியது. இருப்பினும், நதியின் சரியான தோற்றம் மற்றும் பாதை குறித்து இந்தியாவும் நேபாளமும் வேறுபடுவதால் பிரச்னை ஏற்பட்டது. காளி நதி, லிம்பியாதுராவில் உருவாகிறது என்றும், அவ்வாறு உருவானால் கலாபானி மற்றும் லிபுலேக் ஆகியவை நேபாளப் பகுதிக்குள் அடங்கும் என்றும் நேபாளம் வாதிடுகிறது.

வரலாற்றுப் பதிவுகள், நில அளவீடுகள் மற்றும் அப்பகுதியின் மீதான நீண்டகால நிர்வாகக் கட்டுப்பாட்டை மேற்கோள் காட்டி, காலாபானிக்கு அருகிலுள்ள காளி நதியின் வேறொரு மூலத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த எல்லை அமைந்துள்ளது. எனவே இந்த பகுதிகள் இந்தியாவுக்கு சொந்தம் என்று இந்தியா வாதிடுகிறது. சீன எல்லைக்கு அருகிலுள்ள இந்த பகுதிகளின் முக்கியத்துவம் காரணமாக, இந்தியா இப்பகுதியை உத்தரகாண்டில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக நிர்வகித்து, பல ஆண்டுகளாக அங்கு தனது இருப்பைத் தக்கவைத்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்களை வெளியிடுவது உட்பட, ராஜதந்திர மற்றும் அரசியல் வழிகள் மூலம் நேபாளம் தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது. அதே நேரத்தில், இந்தியா இந்தக் கோரிக்கைகளை நிராகரித்து, தனது நிலைப்பாட்டிற்கு வரலாற்று மற்றும் சட்ட ஆதாரங்கள் உள்ளன என்று கூறி வருகிறது.

லிபுலேக் கணவாய் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அது வர்த்தகத்திற்கும், திபெத்தில் உள்ள கைலாஷ் மலைக்குச் செல்லும் இந்திய யாத்ரீகர்களுக்கும் ஒரு முக்கிய பாதையாகச் செயல்படுகிறது. 2020ல் இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பு அந்தக் கணவாய்க்குச் செல்லும் சாலையைத் திறந்து வைத்த பிறகு, இந்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்தது. இந்த நடவடிக்கையை நேபாளம் விமர்சித்தது. உத்தரகாண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு இந்தியா அமைத்த சாலையைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்துப் பேசிய அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே, இந்தத் திட்டத்திற்கு நேபாளம் காட்டும் எதிர்ப்பு, சீனாவைக் குறிப்பிடும் வகையில் ஒரு வெளிநாட்டு சக்தியால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று கூறினார். அப்போதிருந்து, இது இருதரப்பு உறவுகளில் பிரச்னை வெடித்தது.

Related Stories: