நடிகை ரவீனா டாண்டனின் சகோதரர் வீட்டில் கொள்ளை: பணிப்பெண் சிக்கினார்

மும்பை: பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் சகோதரர் வீட்டில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளைத் திருடிய 47 வயது பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனின் சகோதரரான ராஜீவ் டாண்டனின் வீடு மும்பையில் உள்ளது. இந்த வீட்டில் நடிகையின் வயதான தாயார் வீணா டாண்டன் வசித்து வருகிறார்.

அவரை பராமரிக்கும் பொறுப்பு, வீட்டின் பணிப்பெண்ணான கார் பகுதியைச் சேர்ந்த ராஷி சப்ரியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 2020ம் ஆண்டு முதல் வீட்டில் பணியாற்றி வரும் சப்ரியா, குடும்பத்தினர் அனைவரிடமும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அதுமட்டுமின்றி, வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளம் உட்பட அனைத்து இடங்களுக்கும் செல்ல சப்ரியாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு அக்டோபரில், டாண்டன் குடும்பத்தினர் தங்களது லாக்கரை சோதனை செய்த போது அது உடைக்கப்பட்டு இருந்ததும் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள், 2 ஆடம்பரக் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இது குறித்து ராஜீவ் அளித்த புகாரின் பேரில், பணிப்பெண் ராஷி சப்ரியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: