சுயவிருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழில் செய்தால் குற்றவாளிகள் கிடையாது: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: சுயவிருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகள் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சட்டச் சிக்கல்கள் தொடர்பான முக்கிய வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வழந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவு: பொதுவாக பாலியல் தொழில் தொடர்பான சோதனைகளின் போது, அங்கு இருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாகவே கருதப்பட்டு, அவர்களின் விருப்பத்திற்கு மாறாகக் காப்பகங்களில் அடைக்கப்படும் நிலை இருந்து வந்தது. குறிப்பாக ‘ஒழுக்கக்கேடான கடத்தல் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் 17வது பிரிவின்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளில், கடத்தப்பட்டவர்களுக்கும், சுயமாக இத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் இடையிலான வேறுபாடு கவனிக்கப்படுவதில்லை.

குறிப்பாக சுயவிருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும் வயது வந்தவர்களைக் அதாவது 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் குற்றவாளிகளாக கருதக்கூடாது. அவர்களை காவலில் எடுக்கவோ அல்லது கட்டாயமாக மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கவோ கூடாது. மேலும், பாலியல் தொழில் தொடர்பாகப் பிடிபடுபவர்களை மாஜிஸ்திரேட்டுகள் விசாரிக்கும்போது, அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்களா அல்லது சுயவிருப்பத்தின் பேரில் செய்தார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விதிவிலக்கான நேரங்களில் மட்டுமே அவர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட முடியும். எனவே கடத்தல் மற்றும் கட்டாயப்படுத்துதலுக்கு எதிராக மட்டுமே சட்ட நடவடிக்கை இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: