மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புறநகர் ஏசி மின்சார ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை, ஜூன் 2: மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புறநகர் ஏசி ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே சென்னை கோட்டத்தால் இயக்கப்படும் குளிரூட்டப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கு நாளுக்கு நாள் பயணிகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த ஏசி ரயில்கள் வழங்கும் வசதி மற்றும் பயணிகளுக்கு உகந்த சூழல் காரணமாக, புறநகர் பயணிகள் மத்தியில் வரவேற்பு பெருமளவில் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. தற்சமயம், சென்னையின் மிக முக்கியமான மற்றும் பரபரப்பான புறநகர் பாதையில் மொத்தம் 10 ஏசி ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை பயணிகளுக்கு ஒரு சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதோடு, தடையற்ற தரைவழிப் போக்குவரத்து இணைப்பையும் உறுதி செய்கின்றன.

நடப்பு 2026ம் ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக 4,36,462 பயணிகள் ஏசி ரயில் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். மாதவாரியான பயணிகளின் எண்ணிக்கை முறையே ஜனவரியில் 69,454 ஆகவும், பிப்ரவரியில் 66,138 ஆகவும், மார்ச்சில் 89,176 ஆகவும், ஏப்ரலில் 87,431 ஆகவும் மற்றும் மே மாதத்தில் 1,24,263 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த தரவுகள், குறிப்பாக கோடை காலத்தில் சென்னை மக்களிடையே ஏசி ரயில் சேவைகள் அடைந்துள்ள மிகுந்த வரவேற்பை தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன. இந்த ஏசி ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே இதுவரை இல்லாத அளவாக கடந்த மே 2026ல் தான் மிக உயர்ந்தபட்ச பதிவாக 1,24,263 பயணிகள் பயணித்துள்ளனர்.

இதன் மூலம், இச்சேவை வரலாற்றில் புதிய மைல்கல்லாக முதன்முறையாக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் பயணிகளின் எண்ணிக்கையை மிக எளிதாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் மட்டும் 36,832 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர். இது கிட்டத்தட்ட 42 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளதை காட்டுவதுடன் கடுமையான கோடை வெயிலின் போது ஏசி ரயில்களையே மக்கள் பெரிதும் விரும்பியுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மே மாதத்தில் எட்டப்பட்ட இந்த சாதனை, ஏசி ரயில் சேவைகளின் தரம், நம்பகத்தன்மை, சரியான நேர பராமரிப்பு மற்றும் அதன் சொகுசு தன்மை மீது பயணிகள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான கோடை வெப்பம் நிலவி வரும் வேளையில், தங்களின் தினசரி பயணத்தை எவ்வித மன உளைச்சலும் இன்றி, குளிர்ச்சியாகவும், வேகமாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் நிறைவு செய்ய புறநகர் ரயில்வே வலைப்பின்னலை பயணிகள் பெருமளவில் நாடியுள்ளனர்.

இந்த சேவை அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் தினசரி பயணம் மேற்கொள்ளும் இதர பயணிகளுக்கு ஒரு சிறந்த பயண தேர்வாக உருவெடுத்துள்ளது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, நவீன மற்றும் பயணியர்-மையப் புறநகர் ரயில் சேவைகளை வழங்குவதில் சென்னை கோட்டத்திற்கு இருக்கும் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும். பொதுமக்களிடம் இருந்து கிடைத்துள்ள இந்த அமோக வரவேற்பு, பொதுப் போக்குவரத்து தரத்தை உயர்த்துவதிலும், சென்னை புறநகர் ரயில் சேவையில் ஒரு உன்னதமான அனுபவத்தை வழங்குவதிலும் ஏசி ரயில்களின் முக்கியப் பங்களிப்பை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

Related Stories: