மின் தடை காரணமாக நள்ளிரவில் துணை மின் நிலையம் முற்றுகை: அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்

 

பெரம்பூர், மே 22: மின் தடை காரணமாக நள்ளிரவில் துனை மின் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வில்லிவாக்கம் தாதாங்குப்பம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்ட நிலையில், மின்சாரம் தடைப்பட்ட உடன் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர். மின்சார வாரியத்தை பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம் என தொலைபேசியில் அழைத்தனர். ஆனால், மின்வாரிய ஊழியர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கொளத்தூர் பாபா நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய துணை மின் நிலையம் அலுவலகம் முன் திரண்டனர். மின்சார வாரிய பொறியாளர் கவிதாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு நள்ளிரவு 1.40 மணியளவில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் காவல் நிலைய போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திறகு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: