கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு வலுப்பெற்றுள்ளது: சென்னை ஐஐடி ஆராய்ச்சியில் தகவல்

 

சென்னை, மே 22: ஐஐடி மெட்ராஸ் நடத்தியுள்ள ஆய்வில், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அவசர சுகாதார அமைப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், தாய்-சேய் ஆரோக்கியத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டில் தாய்-சேய் உடல்நல ஆரோக்கியம் கணிசமாக மேம்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, தமிழ்நாட்டின் 108 அவசர பதில் அமைப்பிலிருந்து 2017 முதல் 2024 வரையிலான எட்டு ஆண்டுகால உண்மையான அவசர ஊர்தி பதிவேட்டுத் தரவுகளை பகுப்பாய்வு செய்து, மாநில சுகாதார அமைப்பு கொரோனா பெருந்தொற்று கட்டங்களிலும், 2023-24ம் ஆண்டுகளின் தாங்குதிறன் கொண்ட மீட்சிக் காலத்திலும் எவ்வாறு செயல்பட்டது என்பதை விரிவாக ஆராய்ந்தனர்.

42 மாவட்டங்கள் மற்றும் 8.4 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை உள்ளடக்கிய தரவுகளுடன், இந்த ஆய்வு முந்தைய ஆராய்ச்சிகளைவிட இதுவரை இல்லாத பெரிய அளவிலான பகுப்பாய்வை வழங்கியுள்ளது. முன்னர் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பெரும்பாலும் ஒரு மருத்துவமனை அல்லது சிறிய பகுதிகளுக்கு மட்டுமே குறிப்பிடும்படியாக இருந்தன. இந்த ஆய்வின் விளைவுகள் தமிழ்நாட்டை கடந்தும் விரிவடைகின்றன. அவசர ஊர்தி படையை விரிவாக்குதல், பரிந்துரை அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட தாய் சுகாதாரத் திட்டங்கள், பொது முதலீடுகள், பெரிய அளவிலான நெருக்கடிகளின் போதும் சுகாதார விளைவுகளை கணிசமாக மேம்படுத்த முடியும் என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைப் படிப்புகள், தரவு அறிவியல்- செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் பயிற்சிக்கான பேராசிரியராக பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி குறித்து ஐஐடி பேராசிரியர்கள் கூறியதாவது: பெருந்தொற்றுக் காலத்தில், குறிப்பாக 2வது அலைக்காலத்தில், தமிழ்நாட்டில் தாய் சுகாதார அணுகலில் கடுமையான இடையூறுகள் ஏற்பட்டன. கர்ப்பிணிகள் மருத்துவமனைக்குச் செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர், வீட்டுப் பிரசவங்கள் அதிகரித்தன. மேலும், தாய் இறப்பு விகிதம் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் 98.5 சதவீதம் உயர்ந்தது.

பெருந்தொற்றுக்குப் பின் தாய்-சேய் இறப்பு விகிதம் 19 சதவீதம் குறைந்தது. ஒரு லட்சம் குழந்தை பிறப்பில், 37 இறப்புகளாக இருந்தது. இது இந்தியாவின் தேசிய சராசரியைவிட மிகவும் குறைவானது. வீட்டுப் பிரசவங்கள் 36 சதவீதத்திற்கும் மேல் குறைந்தன. கருச்சிதைவுகள் 28 சதவீதம் குறைந்தன. சிக்கலான சுகப்பிரசவங்கள் 19 சதவீதத்திற்கும் மேல் குறைந்தன. பிறந்த குழந்தை இறப்பு 17 சதவீதமும், குழந்தை இறப்பு 19 சதவீதமும் குறைந்தன. இந்த ஆய்வு, கொரோனா காலத்தில் சுகாதார அமைப்புகள் தோல்வியடைந்ததாக பரவலாக புகார் அளிக்கப்பட்டவற்றுக்கு எதிரான ஆதார அடிப்படையிலான எதிர் கருத்தை உலக அளவில் வழங்குவதால் தனித்து நிற்கிறது.

பெருந்தொற்றை ஒரே நிகழ்வாகக் கருதாமல், ஆராய்ச்சியாளர்கள் அதை எட்டு தனித்தனி கட்டங்களாகப் பிரித்து, சுகாதார சேவை வழங்கல் காலப்போக்கில் எவ்வாறு பரிணமித்தது என்பதை விரிவான, துல்லியமான பகுப்பாய்வு செய்ய உதவியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

Related Stories: