சென்னை, மே 20: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தனியார் ஆம்னி பஸ் டிரைவரும், பயணியும் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்டலூர் அடுத்த, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய பொதுமக்கள் தினசரி ஆயிரக்கணக்கில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் இங்கு பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னையில் பணியாற்றும் காவலர் ஒருவர் கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையப் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தில் ஏறுவதற்காக, அதன் டிரைவரிடம் பயண டிக்கெட்டின் விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த டிரைவர் வழக்கமான கட்டணத்தை விட மிக அதிக தொகையை சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் சாதாரண நாட்களிலேயே ஏன் இவ்வளவு அதிக கட்டணம் கேட்கிறீர்கள் என்று டிரைவரிடம் நியாயம் கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வாய் தகராறாக தொடங்கிய இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களில் எல்லை மீறி கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த ஆம்னி பஸ் டிரைவரும், அந்த காவலரும் பொதுமக்கள் மத்தியில் நடைமேடையிலேயே ஒருவரையொருவர் சட்டையை பிடித்துக்கொண்டு பயங்கரமாக தாக்க தொடங்கினர். அங்கிருந்த சக பயணிகளும், மற்ற பேருந்து ஊழியர்களும் அவர்களை விலக்கிவிட முயன்றனர். எனினும், இருவரும் மாறி மாறி சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போதிய அளவு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. இதனால்தான் இதுபோன்ற சமூக விரோத செயல்களும், மோதல்களும் தடையின்றி நடப்பதாக பொதுமக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இதனால், குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் நள்ளிரவில் பயணம் செய்ய வரும் பயணிகள் இதுபோன்ற வன்முறை சம்பவங்களால் தங்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
