திருவொற்றியூர், மே 26: மணலி புதுநகர் அருகே விச்சூர் அருள்முருகன் நகரில் ஏராளமான கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பழைய ஆயில் சேமித்து வைக்கும் கிடங்கில் நேற்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் உள்ளே பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், மணலி, எண்ணூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 10 வாகனங்களில் வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடினர். ஆனால் குடோனுக்குள் எண்ணெய் அடைத்து வைக்கப்பட்ட பேரல்கள் அதிகளவில் இருந்ததால் அதில் தீ பரவி பேரல்கள் வெடித்து சிதறின.
இதனால் வானுயர கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பக்கத்தில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கும் தீ பரவிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். எண்ணெய் குடோனில் இருந்து வெளியேறிய கரும்புகை அப்பகுதியை சூழ்ந்து பரவியதால் தீயணைப்பு பணியில் இருந்த 2 தீயணைப்பு வீரர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். உடனே சக தீயணைப்பு வீரர்கள் இருவரையும் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற முதலுதவி அளித்தனர். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள பல தொழிற்சாலைகளுக்கும் புகைமூட்டம் பரவியதால் தொழிலாளர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதனால் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனை தொடர்ந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தின் காரணமாக பொதுமக்கள் யாரும் தீ பற்றிய பகுதிக்கு செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். தொழிற்சாலையில் சுமார் 1 லட்சம் லிட்டர் வரையிலான ஆயில் பாரல்களில் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை முழுமையாக எரிந்து நாசமானதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `இந்த பகுதியில் ஏராளமான எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் முறையான அனுமதி மற்றும் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுகிறது.
இதுகுறித்து தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தீ விபத்திற்குள்ளான இந்த ஆயில் தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சீல் வைக்கப்பட்டது. ஆனால் இது எப்படி மீண்டும் இயங்க துவங்கியது, யார் அனுமதி கொடுத்தார்கள், என்று தெரியவில்லை. எனவே இங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, அனுமதி இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
