சென்னை, ஜூன் 2: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக 52.55 சதவீத மெட்ரோ பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதற்கட்ட மெட்ேரா ரயில் திட்டத்தில், விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப் பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப் பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பசுமை வழிச்சாலை, கலங்கரை விளக்கம், சேத்துப்பட்டு, பனகல் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கின. பசுமைவழிச் சாலை அடையாறு, சேத்துப்பட்டு ஸ்டெர்லிங் சாலை, அயனாவரம் பெரம்பூர், பனகல் பூங்கா கோடம்பாக்கம் சுரங்கப் பாதை பணிகள் அடுத்தடுத்து நிறைவடைந்தன.கலங்கரை விளக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை ஆர்.கே.சாலை, பசுமைவழிச் சாலை, மந்தைவெளி ஆகிய சுரங்கப்பாதை பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதேபோல், உயர்மட்டப் பாதை பணி பொருத்தவரை 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி, போரூர், வடபழனி தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதே நேரத்தில், போரூர் – வடபழனி இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
வடபழனி, கோடம்பாக்கம், பவர்ஹவுஸ் பாதையில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் உயர்மட்டப் பாதை பணிகளும் மும்முரமாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒட்டுமொத்தமாக, 52.55 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் மெட்ரோ ரயில் சேவை, 4வது வழித்தடத்தில் பூந்தமல்லி, போரூர், வடபழனி தடத்தில் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதையடுத்து, சென்னை வர்த்தக மையம், போரூர் பணிகளை முடிக்க உள்ளோம். போரூர், கோயம்பேடு ஆகிய உயர்மட்டப்பாதை பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதை சேர்த்து நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை ஒட்டுமொத்தமாக 52.55 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 2 மாதங்களாக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். தற்போது, பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர். மீண்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், வரும் 2027ல் அனைத்து உயர்மட்டப்பாதை பணிகளும், 2028ம் ஆண்டுக்குள் அனைத்து சுரங்கப்பாதை பணிகளும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
