திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலம்காலமாக சேவை செய்து வரும் அர்ச்சகர் சமுதாயத்தை அமைச்சர் இழிவுபடுத்துவதா? அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்

தூத்துக்குடி: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு என்ற பெயரில் புதிதாக பொறுப்பேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், காலங்காலமாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை சார்ந்த அர்ச்சர்களை இழிவுபடுத்தியது மிகவும் கண்டனத்திற்குறியதாகும்.

பல நூற்றாண்டுகளாக திருச்செந்தூர் திருக்கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதலும் உதவியும் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர். அறநிலையத் துறையை சார்ந்தவர் அல்லாத திருசுதந்திர அர்ச்சகர்கள் காலம் காலமாக மரபுவழியாக இந்த சுவாமி தரிசன உதவியை செய்து வருகின்றனர். பக்தர்கள் தரும் தட்சனையை பெறுகின்றனர். இந்நிலையில் திருசுதந்திர அர்ச்சகர்கள் செய்யும் ஆன்மிக பணியை இழிவுபடுத்தியுள்ளார் அமைச்சர் ரமேஷ்.

அமைச்சரின் இந்த செயல் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தினரிடம் பெரும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வழிமுறை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியிடாதது சரியானதல்ல என்று கருதுகின்றனர்.

திருச்செந்தூர் தொகுதி அனைத்து சமுதாய மக்களின் நலனை வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு 7வது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பணி இருந்துவரும் நிலையில் திருசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதோடு திருச்செந்தூர் கோயிலின் புகழை சிறுமைப்படுத்திய அமைச்சர் ரமேஷிற்கு எனது வன்மையான கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்கிறேன்.

Related Stories: