விழுப்புரம் அதிமுக கட்சி ஆபீஸ் விவகாரம் இபிஎஸ் ஆதரவாளரிடம் சாவியை ஒப்படைத்தது சி.வி.சண்முகம் தரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியை நீண்ட இழுபறிக்கு பின்னர் சி.வி.சண்முகம் தரப்பினர், இபிஎஸ் நியமித்த மாவட்ட செயலாளரிடம் நேற்று ஒப்படைத்தனர். அதிமுகவில், தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்தது தொடர்பாக எழுந்த உட்கட்சி பிரச்னையில் எஸ்பி.வேலுமணி, சி.வி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்களின் கட்சி பதவிகள் பறித்து, இபிஎஸ் தனது ஆதரவாளர்களை நியமித்தார்.

அப்போது மாவட்டங்களில் கட்சி அலுவலகங்களை கைப்பற்றுவதில் இபிஎஸ் தரப்பிற்கும், அதிருப்தி எம்எல்ஏக்களுக்குமிடையே போட்டி நிலவியது. இந்நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்களில் வேலுமணி உள்ளிட்டவர்கள் மீண்டும் இபிஎஸ்சை சந்தித்து இணைந்தாலும், சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தனித்து உள்ளனர்.  விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகத்திடமிருந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு ஏற்கனவே நகர செயலாளராக இருந்த பசுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியை தன்னிடம் வழங்கக்கோரி எஸ்பியிடம் மாவட்ட செயலாளர் பசுபதி மனு அளித்தார். கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதில் இருதரப்பினரிடையே மோதல் சூழல் ஏற்பட்டதால் போலீசார் கட்சி அலுவலகத்தை கட்டுப்பாட்டில் எடுத்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைத்தனர். அதன்படி ஆர்டிஓ முருகேசன், சி.வி சண்முகம் தரப்பு, இபிஎஸ் தரப்பில் கட்சி அலுவலகம் சொந்தம் கொண்டாடுவதற்கான ஆவணங்களுடன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்.

இருதரப்பினரும் தனித்தனியே ஆஜராகி கட்சி அலுவலகத்திற்குரிய கோப்புகளை வழங்கினர். இதுபற்றி ஆர்டிஓ ஆய்வு செய்து வந்தார். இதனால் கட்சி அலுவலகம் மூடப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இறுதியாக நேற்று காலை ஆர்டிஓ அதிமுக கட்சி அலுவலகம் மீதான விசாரணை முடிந்து உத்தரவு பிறப்பித்தார். அதில் இபிஎஸ் தரப்பு மாவட்ட செயலாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டார். தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல், விதிமுறைபடி கட்சியின் பொதுச்செயலாளர் வசம்தான் கட்சி அலுவலகம் இருக்கிறது.

அவரால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளரிடம் வழங்க வேண்டுமென்று உத்தரவில் கூறியிருந்ததாக தெரிகிறது. இதைதொடர்ந்து நேற்று காலை சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த குணா என்பவர், மாவட்ட செயலாளர் பசுபதியிடம் சாவியை ஒப்படைத்தார். இதையடுத்து அவர் நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்திற்குள் சென்று கொடியேற்றியும், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

நிர்வாகிகளிடம் பேசிய மாவட்ட செயலாளர் பசுபதி, தவெகவிற்கு சென்று நினைத்ததை பெற்றுவிடலாம் என்று செல்பவர்கள் ஏமாற்றத்துடன்தான் திரும்புவார்கள். பிரிந்து சென்றவர்கள் நம்மிடம் வருவார்கள். கட்சியை நாம் வலுப்படுத்த வேண்டும் என்றார். அங்கிருந்த சி.வி சண்முகம் பேனர்களை வெளியேற்றிவிட்டு பசுபதியின் பேனரை வைத்தனர்.

* ஆதரவாளர்களோடு வெளியேற சி.வி.சண்முகம் உறுதி
சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் கூறுகையில், அதிமுகவில் தலைமையை எதிர்த்து இவ்வளவு பிரச்னைகளை சந்தித்துவிட்டு மீண்டும் அங்கு செல்வதில் அவருக்கு துளியும் விருப்பமில்லை. எனவே தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருக்கிறார். வரும் 2ம் தேதி சென்னை செல்லும் சண்முகம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆதரவாளர்களோடு அதிமுகவிலிருந்து வெளியேற திட்டமிட்டிருக்கிறார். தவெகவில் இணைவாரா அல்லது அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியிருப்பாரா என்று தெரியவில்லை என்றனர்.

Related Stories: