சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக விஜய் நாளை திருச்சி செல்கிறார். அங்கு அவர் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வென்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல் அமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய், வரும் நாளை(திங்கட்கிழமை) அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செல்கிறார்.
அங்கிருந்து வாகனம் திருச்சி புதுக்கோட்டை சாலை, டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்திற்கு செல்கிறார். பின்னர் அங்கே ஏற்பாடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்வானது நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் முதல்வர் விஜய் 91,381 வாக்குகள் பெற்று 24,416 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார். இந்த தொகுதியில் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகள் பெற்று இருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகரன் 19,715 வாக்குகள் மட்டுமே பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் அங்கு செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முதல்வராக பொறுப்பேற்று முதல் முறையாக திருச்சி விஜய் வர உள்ளதால் தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அந்த வகையில், திருச்சி கிழக்குடன் சேர்த்து பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளையும் சேர்த்து 5 இடங்களுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதியை தொடர்ந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் முதல்வர் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
