திருச்செந்தூர்: இந்திய அஞ்சல் துறை சார்பில் கலாசார, வரலாற்று மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சிறப்பிக்கும் வகையில் நிரந்தர சித்திர அஞ்சல் முத்திரை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மிக்க அஞ்சல் முத்திரை பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கடந்த 1978ல் வெளியிடப்பட்டது. முருகப்பெருமானின் மீதமுள்ள 5 படை வீடுகளுக்கும் நேற்று அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.
இதில் 2ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சிறப்பு நிரந்தர அஞ்சல் முத்திரை வைகாசி விசாக திருநாளான நேற்று வெளியிடப்பட்டது. திருச்செந்தூர் தலைமை அஞ்சலகத்தில் நடந்த விழாவில் தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இந்த சிறப்பு முத்திரையை வெளியிட்டார். சிறப்பு முத்திரையில் கோயில் ராஜகோபுரம், வேல் மற்றும் சேவல் கொடியும், திருச்செந்தூர் என்று இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளது.
