சென்னை: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மட்டும்தான் என்று அதிமுக எம்பி இன்பதுரை கிண்டலடித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியாகவும் செயல்படும் நிலை ஏற்பட்டது. இதில் எஸ்.பி.வேலுமணி அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் விஜய் தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் வாக்களித்தனர்.
பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது இரு அணிகளும் ஒன்றிணைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விலகி விஜய்யின் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ‘‘நாங்கள் எம்ஜிஆர் வழியை பின்பற்றுகிறோம். எனவே 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனமுவந்து தவெகவில் சேர உள்ளனர்.
அது விரைவில் நடைபெறும்” என்றார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்து கூறும்போது, ‘‘தவெக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மீது நம்பிக்கை இழந்து விட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டீர்களா? நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அதிமுக தொண்டர்களை கட்சியில் சேருங்கள் என்று பிச்சை எடுப்பதுபோல கூவி கூறி அழைக்கிறீர்களே. இன்றைக்கு விஜய்யின் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா?” என்று கடும் விமர்சனம் செய்து இருந்தார்.
இதேபோன்று, அதிமுகவின் மாநிலங்களவை எம்பியும், வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை நேற்று சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகளையும், அதிமுக உள்ளிட்ட பிற அரசியல் கட்சிகளை பற்றிய அவரது கருத்துக்களையும் பார்க்கும்போது, தவெக ஆட்சியில் உண்மையான முதலமைச்சர் அவர்தான் போல தெரிகிறார். இதுவரை ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
