ஆதிதிராவிடர் நலத்துறையின் பெயர் சமூக நீதித்துறை என மாற்றம்: அமைச்சர் வன்னி அரசு தகவல்

சென்னை : தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்ற பெயர் சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்றிருந்த துறையின் பெயர், அரசு பொறுப்பேற்றதும் ‘சமூக நீதித்துறை’ என்று மாற்றம் செய்யப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரி சனநாயக சக்திகளின் பல்லாண்டு கால கோரிக்கையின் தொடர்ச்சியாக, முதலமைச்சர் இந்த பாராட்டத்தக்க மாற்றத்தை மேற்கொண்டார். கடந்த 22ம் தேதி அமைச்சரவை ஒதுக்கீடு குறித்து ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பழங்குடியினர் என்பதற்கு பதிலாக ‘Hill Tribes’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக தோழர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னர் தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் ‘ஹரிஜன் மற்றும் பழங்குடி மக்கள் நல இயக்குநர் அலுவலகம்’ என்ற பெயரில் நமது துறை செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில், சமூக நலத்துறை வெளியிட்ட ஆணையின்படி ‘ஹரிஜன்’ எனும் சொல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நல இயக்குநர் அலுவலகம்’ என்று தமிழில் பெயர் திருத்தப்பட்டது. மேலும், சமூக நலத்துறை வெளியிட்ட மற்றொரு ஆணையின்படி ஆங்கில பயன்பாட்டிலும் ‘ஹரிஜன்’ என்ற சொல் நீக்கப்பட்டு, ஆதிதிராவிடர் என்று திருத்தப்பட்டது.

1988ம் ஆண்டு தான் சமூக நலத்துறையிலிருந்து தனியே பிரித்து ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’ என்று உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டின்படி ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை’ என்பதே துறையின் பெயராக இதுவரை இருந்து வந்துள்ளது. தற்போது ‘சமூக நீதித்துறை’ என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: