தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: பிரேமலதா கண்டனம்

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை, வன்முறை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பிரேமலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொலைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

சென்னையில் 16 வயது சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக வடபழனி காவல் நிலைய தலைமைக் காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவரே இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சென்னையில் 61 வயது மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் அருகே 11 வயது சிறுமி, 62 வயது முதியவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இவை மனிதநேயத்தை தலைகுனியச் செய்துள்ளது. ஆலங்குளம் அருகே நடைபெற்ற திருமண வீட்டில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டிய சம்பவம் சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மண்ணில் அரைகுறையாக புதைக்கப்பட்ட நிலையில் 30 வயது இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது தமிழக மக்களிடையே மிகுந்த வேதனையையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக வாழும் சூழலை உறுதி செய்வது அரசின் முதன்மை பொறுப்பாகும். முதல்வர் நேரடியாக இந்த விவகாரங்களில் கவனம் செலுத்தி, சட்டம் – ஒழுங்கை வலுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிரந்தரமான தீர்வுகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: