இன்டர்நெட் பயன்படுத்துவோர் அதிகரிப்பு; பெண்களிடம் மாதவிடாய் சுகாதாரம் மேம்பட்டுள்ளது: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

புதுடெல்லி: தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-6ல், இந்தியாவில் பெண்களிடம் மாதவிடாய் கால சுகாதாரம் மேம்பட்டிருப்பதாகவும், இன்டர்நெட் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூலம், மும்பையை சேர்ந்த சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தின் உதவியுடன், 6வது தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (என்எப்எச்எஸ்-6) கடந்த 2023-24ல் மேற்கொள்ளப்பட்டது.

நாடு முழுவதும் 715 மாவட்டங்களில் சுமார் 6.79 லட்சம் குடும்பங்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மக்கள் தொகை, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்ப நலம் குறித்த மிக முக்கியமான தரவுகளை வழங்குகிறது. இந்த ஆய்வின் முடிவுகளை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களிடையே மாதவிடாய் கால பாதுகாப்பிற்கான சுகாதார முறைகளை பயன்படுத்தும் விகிதம் 79.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த 2019-21ல் எடுக்கப்பட்ட முந்தைய 5ம் ஆய்வில் 77.6 சதவீதமாக இருந்தது.

இந்த அதிகரிப்பிற்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாதவிடாய் சுகாதார திட்டம் போன்ற திட்டங்களும், பிரதான் மந்திரி ஜனவ்சதி பரியோஜனா திட்டங்களின் கீழ் மலிவு விலையில் கிடைக்கும் சுகாதார பொருட்களும் துணை புரிந்ததாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே போல, பெண்களின் டிஜிட்டல் பயன்பாடு மற்றும் நிதிசார் அதிகாரமளித்தலிலும் தொடர்ந்து முன்னேற்றங்கள் ஏற்பட்டு வதை ஆய்வு முடிவுகள் பதிவு செய்துள்ளன. ஒருநாளுக்கு குறைந்தது ஒருமுறையாவது இன்டர்நெட் பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் கடந்த 2019-21ல் 33.3 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 64.3 சதவீதமாக, சுமார் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

வங்கி அல்லது சேமிப்பு கணக்குகளை கொண்டுள்ள பெண்களின் விகிதம் 2019-21ல் 78.6 சதவீதத்தில் இருந்து 2023-24ல் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. தங்களுக்கென தனிப்பட்ட செல்போன் வைத்துள்ள பெண்களின் விகிதம் 53.9 சதவீதத்தில் இருந்து 63.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை நோக்கி இந்தியா சீராக முன்னேறி வருவதாக இந்த ஆய்வு முடிவுகள் மீண்டும் உறுதிபடுத்துவதாக ஒன்றிய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

* நவீன கருத்தடைகள் பயன்பாடு குறைவு
திருமணமான பெண்களிடையே நவீன கருத்தடை முறைகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக தேசிய குடும்ப நல ஆய்வு 6-ன் மூலம் தெரியவந்துள்ளது. 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் நவீன குடும்ப கட்டுப்பாட்டு முறையை பயன்படுத்துவோரின் விகிதம் 56.4 சதவீதத்தில் இருந்து 52.7 சதவீதமாக சரிந்துள்ளது.

அதே சமயம் பாரம்பரிய கருத்தடை முறைகளை பயன்படுத்துவோர் விகிதம் 10.3 சதவீதத்தில் இருந்து 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாரம்பரிய கருத்தடை முறைகளால் திட்டமிடப்படாத கர்ப்பங்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories: