புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது மற்றும் தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகருடன் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிற்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு விவகாரத்தில் கூடுதல் அமர்வு நீதிபதி பிரசாந்த் சர்மா நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், ‘‘குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் முதற்கட்டமாக உள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா பால் மற்றும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட மொத்தம் 17 பேர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்த வழக்கில் வலுவான சந்தேகத்தை எழுப்புவதற்கான போதிய ஆதாரங்கள் முதற்கட்டமாக கோப்புகளில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும் பணமோசடி தடுப்புச் சட்டம் பிரிவு 3 மற்றும் பிரிவு 4-ன் கீழ் 17 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யலாம். குறிப்பாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், பிங்கி இரானி உட்பட அனைத்து 17 பேரையும் வரும் ஜூன் 3ம் தேதி பிற்பகல் இரண்டு மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் முறைப்படியான குற்றச்சாட்டுப் பதிவில் அவர்கள் கையெழுத்திட வேண்டும்.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த மிரட்டிப் பணம் பறித்த முதன்மை வழக்கில் குற்றவாளி அல்ல. ஆனால், சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து சுமார் ரூ 7 கோடி மதிப்பிலான சொகுசு பரிசுகளையும், பணத்தையும் அவர் பெற்றதன் மூலம் பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
