புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2024 ஜூன் 9ம் தேதி 3வது முறையாக ஆட்சி அமைத்து. இதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 72 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்பாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், அடுத்த மாதம் ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் டெல்லி உள்ளிட்ட 4 மாநில பாஜ தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இதில் டெல்லி மாநில பாஜ தலைவராக ஒன்றிய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டனர். இதுவே ஒன்றிய அமைச்சரவையின் மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இது தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பொது நுழைவுத்தேர்வுகளில் குளறுபடி என பல்வேறு விஷயங்களில் சில அமைச்சர்களின் செயல்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதால், புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 15 முதல் 18ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. இதில் 12 அமைச்சர்களின் பதவி நீக்கப்படலாம் அல்லது வேறு துறைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2 கேபினட் அமைச்சர்கள், 3 இணை அமைச்சர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இணை அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளனர்.
இதில் தென் மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரயில்வே, நிதி, பொருளாதார விவகாரம், நிலக்கரி, ஜவுளி, தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரசாயனம் மற்றும் உரம் உள்ளிட்ட துறைகளில் மாற்றங்கள் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
