புனே: தேவை ஏற்பட்டால் ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு ஆயுத படைகள் தயாராக உள்ளது என ராணுவ தலைமை தளபதி திவேதி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்தியதாக குற்றம்சாட்டிய இந்தியா, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நேற்று நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, “முந்தைய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. தற்போது போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் 2.0 மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் முப்படைகளும் தயார் நிலையிலேயே உள்ளன.
விண்வௌி, இணையவழியிலான சைபர் தாக்குதல்கள் மற்றும் அறிவுசார் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நவீன போர் களங்கள் மிகவும் வௌிப்படையாக மாறி விட்டன. ஒவ்வொருவரின் நடவடிக்கையும் மற்றவர்களுக்கு நன்றாக தெரிகிறது. அதனால் நமது படை குவிப்பு, ராணுவத்தில் ஆள் சேர்ப்பு மற்றும் எல்லை பகுதிகளில் உள்ள நமது படையினர் மற்றும் குடிமக்களை பாதுகாப்பது போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தற்கால மற்றும் எதிர்கால போர்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்கள், டிரோன் அமைப்புகள் மற்றும் பலமுனை போர் உத்திகளை கையாள முப்படைகளும் தங்களை முழுமையாக தயார்படுத்தி கொண்டுள்ளன” என்று இவ்வாறு தெரிவித்தார்.
