புதுடெல்லி: கூடங்குளம் அணு உலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் எஸ்.பி.உதயகுமார் என்பவர் மத்திய தகவல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனுவை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அதனை பரிசீலனை செய்த ஆணையம், ‘‘கூடங்குளம் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருஷேந்திர குமார் கெளரவ் நேற்று வழங்கிய தீர்ப்பில், ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அறிக்கையை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கண்டிப்பாக வழங்க முடியாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக இது நாட்டின் பாதுகாப்பு, ராணுவம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் ஆகியவை சார்ந்த ஒன்றாகும்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியா மற்றும் ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் உருவானது ஆகும். அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து உச்ச நீதிமன்றமே ஏற்கனவே விரிவாக ஆராய்ந்து திருப்தி அடைந்துள்ளதால், இந்த மிக ரகசியமான தொழில்நுட்ப அறிக்கையை வெளியிடுவதில் எந்தவொரு கூடுதல் பொதுநலனும் இல்லை என்று திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
