ஐபிஎல் பைனலில் இன்று அட்டகாச ஃபார்மில் ஆர்சிபி அடங்க மறுக்கும் குஜராத்

அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று, பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதவுள்ளன. கடந்த இரு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்த ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. மொத்தம் 10 அணிகள் மோதிய இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. முதல் இரு இடங்களை பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – குஜராத் டைடன்ஸ் அணிகள் குவாலிபையர் 1 சுற்றில் மோதின.

அதில் வென்ற பெங்களூரு நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதன் பின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையே நடந்த எலிமினேட்டர் போட்டியில் வென்ற ராஜஸ்தான் நேற்று முன்தினம் நடந்த குவாலிபையர் 2 போட்டியில் குஜராத்துடன் மோதியது. இதில் வென்ற குஜராத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.  இந்நிலையில், அகமதாபாத்தில் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பெங்களூரு-குஜராத் அணிகள் மல்லுக்கட்ட உள்ளன.

நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, பேட்டிங், பந்து வீச்சு என எல்லா துறைகளிலும் பலம் வாய்ந்த, எதையும் சந்திக்கும் திறன் பெற்ற அணியாக திகழ்கிறது. குவாலிபையர் 1ல் குஜராத்தை வீழ்த்திய தெம்புடன் அந்த அணி இன்றைய போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, தேவ்தத் படிக்கல், டிம் டேவிட், கேப்டன் ரஜத் படிதார், பில் சால்ட், ஆகியோர் பேட்டிங்கில் தங்கள் வல்லமையை அவ்வப்போது நிரூபித்து அணியை வெற்றி பாதையில் பயணிக்க செய்து வருகின்றனர்.

படிதாரின் நிதானமாக, அதேசமயம் சரியான முடிவை எடுக்கும் திறன், பெங்களூரு அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகரித்து வருகிறது. ஜோஷ் ஹசல்வுட், ரசிக் தர், சுயாஷ் சர்மா, புவனேஷ்வர் குமார் உள்ளிட்டோர் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். குஜராத் அணியை பொறுத்தவரை, பந்து வீச்சில் பட்டையை கிளப்பி வருகின்றனர். அகமதாபாத் ஆடுகளம், குஜராத் அணியின் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அணியின் வேகம் காகிஸோ ரபாடா 28 விக்கெட்டுகள் வீழ்த்தி ஊதா தொப்பிக்கான பந்தயத்தில் முன்னிலை வகிக்கிறார். தவிர, முகம்மது சிராஜ், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர், பிரசித் கிருஷ்ணா குஜராத்தின் வெற்றிக்கு முக்கிய தூண்களாக களமாடி வருகின்றனர். நடப்பு தொடரில், ரபாடா 165 டாட் பந்துகளையும், சிராஜ் 162 டாட் பந்துகளையும் வீசி எதிரணி வீரர்களை திணறடித்துள்ளனர்.

குஜராத் அணியின் துவக்க வீரர்களான சாய் சுதர்சன், சுப்மன் கில் இணை அட்டகாச ஃபார்மில் நடப்பு தொடர் முழுவதும் ஆடி அசத்தி வருகிறது. பவர் பிளேயில் இவர்கள், ஓவருக்கு 11 அல்லது 12 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை அநாயாசமாக உயர்த்தி வருகின்றனர். பேட்டிங்கில் அதிக ரன் குவித்து ஆரஞ்ச் தொப்பியை வெல்லும் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷிக்கு (776 ரன்) பின், கில் (722 ரன்), சுதர்சன் (710 ரன்) உள்ளனர்.

இன்றைய போட்டியில் வைபவை முந்தும் வாய்ப்பு இவர்களில் ஒருவருக்கு கிடைக்கலாம். அந்த அணியில் ஜாஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், ராகுல் தெவாட்டியா உள்ளிட்டோரும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெருவிருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Related Stories: