2038 ஆசிய இளையோர் விளையாட்டு போட்டிகள் நடத்த இந்தியா விருப்பம்

புதுடெல்லி: சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிகளை ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2038-ம் ஆண்டு ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளை (Asian Youth Games) நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விருப்பக் கடிதத்தை ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலிடம் இந்தியா வழங்கியுள்ளது.

ஏற்கனவே 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்தவும், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தவும் தீவிரமான திட்டமிடல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றுடன் இணைந்து 2038 ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த விளையாட்டு அமைச்சகம் முயன்று வருகிறது. சீனாவின் சான்யாவில் நடைபெற்ற ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடந்த ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில், இந்தியாவின் இந்த விருப்பம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இத்தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சேர்ந்த மிட்டல் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், 2038-ம் ஆண்டு போட்டிகளை நடத்தும் நாடு எது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: