புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளில் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெறுவதற்கான அரையிறுதிச் சுற்றுப் போட்டியில் வினேஷ் போகத் தோல்வியை தழுவி வெளியேறினார். கடந்த 2024ம் ஆண்டு பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் மோதவிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வினேஷ் போகத், ஒரு குழந்தை பெற்ற பின்னர், மீண்டும் போட்டிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். ஆனால், ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், இந்தியாவுக்கு சங்கடம் ஏற்பட்டதாக கூறி, அவர் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த சம்மேளனம் தடை விதித்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று, போட்டிகளில் மீண்டும் பங்கேற்க அனுமதி வாங்கினார் வினேஷ் போகத். இந்நிலையில், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் வினேஷ் பங்கேற்றார். 53 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி வரை முன்னேறிய அவர், மீனாட்சி கோயத்திடம் 4-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தார்.
