நியூ சண்டிகர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபயர் 2 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற குஜராத் அணி பைனலில் நுழைந்தது. ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2 போட்டி நியூசண்டிகரில் நேற்று நடந்தது. அதில், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து, அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி துவக்க வீரர்களாக களமிறங்கினர். முகம்மது சிராஜ் வீசிய முதல் ஓவரில், ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அடுத்து வந்த துருவ் ஜுரெல் (7 ரன்), காகிஸோ ரபாடா ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த ரவீந்திர ஜடேஜா 34 ரன் எடுத்திருந்தபோது காயமடைந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ரியான் பராக் 11, தாசுன் ஷனகா 3, ஜோப்ரா ஆர்ச்சர் 7 ரன் எடுத்து அடுத்தடுத்து வீழ்ந்தனர். அதையடுத்து, ஜடேஜா மீண்டும் பேட்டிங்கை தொடர களம் புகுந்தார். இதற்கிடையே வைபவ், 31 பந்துகளில் அரை சதம் எட்டினார்.
தொடர்ந்து அதிரடி காட்டி ரன் வேட்டையில் ஈடுபட்ட வைபவ் (47 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி, 96 ரன்), ரபாடா வீசிய 18வது ஓவரில் ஆட்டமிழந்து, சதமடிக்கும் வாய்ப்பை 2வது முறையாக நூலிழையில் மீண்டும் பறிகொடுத்தார். அதன்பின், டொனோவன் பெரெரா, ஜடேஜாவுடன் இணை சேர்ந்தார். கடைசி ஓவரில் பெரெரா 4 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டினார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் ஜடேஜா 35 பந்துகளில் 45, பெரெரா 11 பந்துகளில் 38 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் ரபாடா, ஹோல்டர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 2வது இன்னிங்சை துவங்கிய குஜராத் அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டி பைனலில் நுழைந்தது. அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 104 ரன் விளாசினார். சாய் சுதர்சன் 58 ரன் எடுத்தார்.
