ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி டபுள் கோலடித்த நவுஷீன் டக்கராய் வென்ற இந்தியா: இன்று கொரியாவுடன் மல்லுக்கட்டு

ககாமிகஹரா: ஆசிய கோப்பை யு-18 மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று, இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. ஆசிய கோப்பை யு-18 மகளிர் ஹாக்கி போட்டிகள் ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடந்து வருகின்றன. ஏ பிரிவில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – மலேசியா மகளிர் அணிகள் மோதின. போட்டி துவங்கியது முதல் இந்திய அணி சிறப்பாக ஆடி பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் போடுவதில் முனைப்பு காட்டியது.

அதன் பலனாக, 19வது நிமிடத்தில் இந்தியாவின் நவுஷீன் முதல் கோல் போட்டு அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 28வது நிமிடத்தில் தனது அணிக்காக மேலும் ஒரு கோல் போட்டு வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

அதைத் தொடர்ந்து 41வது நிமிடத்தில் மலேசியா வீராங்கனை நூர் அஸ்லி சிறப்பாக பந்தை கடத்திச் சென்று முதல் கோல் போட்டார். அதன் பின் இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை. எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அபார வெற்றி பெற்றனர். இப்போட்டியின் ஆட்ட நாயகியாக நவுஷீன் தேர்வு செய்யப்பட்டார். இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி, தென் கொரியா அணியை எதிர்கொள்கிறது.

Related Stories: