புதுடெல்லி: ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்துள்ளது. கடந்த 3ம் தேதி நடந்த இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததை அடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, புதிய மறுதேர்வு வரும் ஜூன் 21ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த மறுதேர்வுக்கு மாணவர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், ஏற்கனவே பதிவு செய்திருந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இதில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், ஜூன் 14ம் தேதிக்குள் புதிய நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வுக்கான முந்தைய கட்டணம் மாணவர்களின் கணக்கிற்கே திரும்ப வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு, வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை ஜூன் 22ம் தேதி இரவு 11:50 மணி வரை தேசிய தேர்வு முகமை தற்போது நீட்டித்துள்ளது.
இதுவரை சுமார் 13 லட்சம் மாணவர்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்துள்ள நிலையில், விடுபட்ட மாணவர்கள் கடைசி நேர தொழில்நுட்ப பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் உடனடியாக விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு, வங்கி பெயர் மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் ஆகியவற்றை மிக துல்லியமாக உள்ளிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள தேசிய தேர்வு முகமை, ‘மாணவர்கள் ஒருமுறை சமர்ப்பிக்கும் வங்கி கணக்கு விவரங்களே இறுதியானது; அதில் பின்னர் எந்த மாற்றமும் செய்ய முடியாது’ என்று எச்சரித்துள்ளது.
