புதுடெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி மாற்றத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய முதல்வராக டி.கே.சிவக்குமார் விரைவில் பதவியேற்க உள்ளார். கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தனது பதவியை நேற்று தாமாக முன்வந்து ராஜினாமா செய்தார். பெங்களூருவில் உள்ள லோக் பவனில் ஆளுநரின் சிறப்பு செயலரிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய சித்தராமையா, ‘நான் எனது பதவியை தாமாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளேன். எனக்கு எந்த அழுத்தமும் இல்லை’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதோடு, அவரது தலைமையிலான அமைச்சரவையையும் உடனடியாக கலைத்து உத்தரவிட்டார். புதிய மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, சித்தராமையா தற்காலிக முதல்வராக தொடர்ந்து செயல்படுவார் என்றும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, கர்நாடகாவில் புதிய அரசு அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்திப்பதற்காக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று இரவு சாணக்கியபுரியில் உள்ள கர்நாடக பவனிற்கு வந்தடைந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘இன்று வானிலை மிகவும் மோசமாக உள்ளது. எங்களது முதல்வர் ஜெய்ப்பூரில் தரையிறங்கியுள்ளார். அங்கு அதிக கொந்தளிப்பு நிலவுகிறது’ என்றார். ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தற்காலிக முதல்வர் சித்தராமையாவை, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். டெல்லியில் இன்று நடக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை டி.கே.சிவக்குமார், சித்தராமையா, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் சந்தித்துப் பேசுகின்றனர். புதிய அமைச்சரவை மாற்றம், 7 சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
கர்நாடகாவில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களில், 2 இடங்களில் காங்கிரஸ் எளிதாக வெல்லும் சூழல் உள்ளதுடன், கூடுதல் வாக்குகளுடன் 3வது இடத்தையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஜாதி ரீதியிலான சமநிலையை பேண 4 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சித்தராமையாவின் பாரம்பரியத்தை தொடரும் வகையில் அவரது மகன் யதீந்திரா (சட்டமன்ற மேலவை உறுப்பினர்) புதிய அமைச்சரவையில் முக்கிய துறையுடன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்தின் தேதி இன்று இறுதி செய்யப்பட்டவுடன், டி.கே.சிவக்குமார் முதல்வராக பதவியேற்கும் தேதியும் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
