கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும் என்று அக்கட்சியின் மூத்த எம்பி சுகேந்து சேகர் ராய் அதிரடியாக கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தற்போது தலைமைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளின் போது அமைதியாக இருந்த தலைவர்கள், தற்போது கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இளம்பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டில் கட்சிப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ‘ஐ-பேக்’ நிறுவனம், 2021ம் ஆண்டில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற உதவிய போதிலும், தற்போது கட்சியின் அழிவிற்கு அதுவே காரணம் என்று மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கட்சி பதவிகள் பணத்திற்காக விற்கப்படுவதாகக் கூறி தனது பதவிகளை ராஜினாமா செய்த திரிணாமுல் எம்பி ககோலி கோஷ், ஐ-பேக் நிறுவனத்தின் ஆதிக்கம் கட்சிக்கு நல்லதல்ல என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர்களில் ஒருவரான மாநிலங்களவை எம்பி சுகேந்து சேகர் ராய் அளித்த பேட்டியில், `திரிணாமுல் காங்கிரஸ் இன்னும் சில நாட்களில் அழிந்துவிடும்.
தேசிய அரசியலில் இந்த கட்சி தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது, இனி எந்த கட்சியும் எங்களுடன் கைகோர்க்காது’ என்று வெடித்துள்ளார். மேலும், கட்சியை அழிக்க ஐ-பேக் நிறுவனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுக்கப்பட்டதாகவும் அவர் சாடியுள்ளார். இந்த உள்விவகார பிரச்னைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பொதுவெளியில் விமர்சனம் செய்யும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 உறுப்பினர்களைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை திரிணாமுல் காங்கிரஸ் அமைத்துள்ளதுடன், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தாவை 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
