சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது முள்ளிகுளத்தில் போதிய வகுப்பறை இன்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவல

புளியங்குடி, மார்ச் 4:  புளியங்குடி அருகே முள்ளிக்குளத்தில் உள்ள அரசு பள்ளியில் சேதமடைந்தாக வகுப்பறைகள் இடிக்கப்பட்டதால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரசு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமுக ஆர்வலர்களும், பெற்றேர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். புளியங்குடி-சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் உள்ளது முள்ளிக்குளம். இங்குள்ள பாண்டியகோனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் முள்ளிகுளத்தை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். 11ம் வகுப்பில் மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன. கடந்த 3வருடங்களுக்கு முன்பு பள்ளியில் சில வகுப்பறைகள் சேதமடைந்ததையடுத்து புதிய கட்டிடம் கட்டும் நோக்கத்தில் 6 வகுப்பறைகளும், ஒரு ஆய்வகமும் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்படவில்லை. மேல்நிலை அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு 2ஆய்வகங்கள் தேவைப்படுகிறது.

கூடுதல் வகுப்பறைகள் இல்லாமலும், போதுமான ஆய்வக வசதி இல்லாமலும் படித்து வருகின்றனர்.  பள்ளியில் 9 முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 200 மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாணவர்கள் சமுக இடைவெளியில் அமர வைப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மரத்தின் அடியில்  படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இடிக்கப்பட்ட வகுப்பறைகளுக்கு பதிலாக புதிதாக வகுப்பறைகள், ஆய்வகங்கள் அரசு உடனடியாக கட்டி தரவேண்டும் என்று பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>