சென்னை: தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் என 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்களின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை மீறி கூட்டுறவு வங்கியில் ரூ.50 ஆயிரம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி என்றும், அதற்கு மேல் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றம் ரூ.5 ஆயிரம் மட்டும் தள்ளுபடி என்று நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயிர் கடன் குறைந்தது ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றுள்ளனர். அந்த கடனை தற்போது உள்ள கோடை வெளியிலால் கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் ஒரு தலைபட்சமான ரூ.50 ஆயிரம் வரை வாங்கிய பயிர் கடன் மட்டும் முழுமையாக தள்ளுபடி என்று அறிவித்ததற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி நாராயணசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்அறிவிப்பின்றி சென்னையில் உள்ள தலைமை செயலகம் அருகே ஒன்று கூடினர். இதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் என்ன என்று விவசாயிகளிடம் விசாரித்தனர். அப்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர்.
ஆனால் போலீசார் தற்போது முதல்வரை பார்க்க முடியாது, அவரை பார்க்க முன்அனுமதி பெறவேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்ைத முற்றுகையிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் தலைமை செயலகத்திற்குள் யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகள் அமைத்து விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்தால் தான் நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று கூறி தொடர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீசார் விவசாய சங்க நிர்வாகிகள் சிலரை மட்டும் உள்ளே மனு அளிக்க அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் விவசாயிகள் அனைவரும் தலைமை செயலகம் முன்பு ஒன்று கூடியதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே விவசாயம் சங்க நிர்வாகியான நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘பயிர் கடனை பொறுத்தமட்டில் சிறு, குறு விவசாய பயிர் கடன்கள் தான் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்கவில்லை. சிறு விவசாயிகள் என்றாலும் கூட ஏக்கருக்கு கரும்பு சாகுபடி செய்தால் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. எனவே தற்போது செய்துள்ள பயிர் கடன் தள்ளுபடியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போது உள்ள முதலமைச்சர் புதிய முதல்வராக இருப்பதால், மறு பரிசீலனை செய்து விவசாயிகளின் கடன்களை கடந்த கால ஆட்சியாளர்கள் எப்படி எந்தவித பாகுபாடும் இல்லாமல் தள்ளுபடி செய்தார்களோ அதேபோல் அனைத்து விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், நீண்ட கால பிரச்னையான மேகதாது அணை பிரச்னை, தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்கும் தடை நீக்கக்கோரிய பிரச்னை, நதிகள் இணைப்பு கோரி முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். முதல்வரை சந்திக்க அனுமதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் நிலை தற்போது உள்ளது’ என்றார்.
