குதிரை பேர அரசியலை திசை திருப்ப கடன் தள்ளுபடி: விவசாயிகளை ஏமாற்றும் அரசு நிலைத்ததில்லை: எடப்பாடி ஆவேசம்

 

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம் என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது. குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றி கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிமுக அரசு கடந்த 2021ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரை துடைத்தது. அதுதான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வை அறிந்து மேற்கொள்ளும் செயல். ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

இவர்கள் இப்போது வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதை பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும். இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று. மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை. சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன். அந்த பச்சை துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்த செய்யுங்கள்.

Related Stories: