விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது: கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

 

சென்னை: விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி ஏமாற்றம் அளிக்கிறது. கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை இது குறைக்காது என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வர், விவசாயிகள் சாகுபடி செலவின வகைக்காக கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்களில் ரூ.50 ஆயிரம் வரையான கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். இது தலைமுறை, தலைமுறையாக கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் துயரங்களை குறைக்காது.

தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும்” என வழங்கியுள்ள உறுதி மொழிக்கும் மாறானது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளின் பயிர் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்து, மறு உத்தரவு வழங்க வேண்டும்.

பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகித கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த தவெக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த குறு சிறு விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட துரோகம். தமிழகம் முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள குறு சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

முகமது முபாரக் (எஸ்டிபிஐ மாநில தலைவர்): தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது விவசாயிகளை தரம் பிரித்து, விகிதாச்சார அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்திருப்பது ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும். இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் விஜய் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: