ஓடும் ரயிலில் ரூ.180 கோடி போதைபொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய யேசுராஜ் தொடர்பு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சட்டவிரோத சொத்து குவிப்பு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

 

சென்னை: 2024ல் ஓடும் ரயிலில் ரூ.180 கோடி மதிப்பு போதை பொருள் கடத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த யேசுராஜ் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் யேசுராஜ் (35). கடந்த 2024ல் ரயில் மூலம் ரூ.180 கோடி மதிப்பு 30 கிலோ உயர் ரக போதை பொருள் கடத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருடன் சென்னையை சேர்ந்த மோனிஷா ஷீலா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வரும் நிலையில், போதை பொருள் கடத்திய யேசுராஜ் உள்ளிட்ட 3 பேர் பல போடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்து பல்வேறு பினாமி பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது தெரியவந்தது. இதனால் அமலாக்கத்துறை யேசுராஜ் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிறையில் இருந்த யேசுராஜ் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் வியாசர்பாடியில் உள்ள யேசுராஜ் வீடு மற்றும் அவரது நெருங்கிய தொடர்பு கொண்ட கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 8வது லேன் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோ வீடு, கொடுங்கையூர் அபிராமி அவென்யூ பகுதியை சேர்ந்த பிலோமன் பிரகாஷ் என்பவரின் வீட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, போதை பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு விவரங்கள், பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
மேலும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் வங்கி கணக்கு விவரங்கள் பல சிக்கியதாக கூறப்படுகிறது. அந்த விவரங்களை வைத்து யேசுராஜூடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 3 இடங்களிலும் நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது.

Related Stories: