பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற நில உடமை விவரங்களை பதிவு செய்ய 31ம் தேதி கடைசி நாள்

 

கிருஷ்ணகிரி, மே 26: பிரதமரின் கவுரவ நிதி உதவி பெற, நில உடமை விவரங்களை பதிவு செய்வதற்கு வரும் 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பாரத பிரதமரின் கவுரவ நிதி உதவி பெறும் 15,977 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். ஒன்றிய அரசு மூலம் வழங்கப்படும் ரூ.2,000 உதவித்தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை உள்ளிட்ட தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பிக்க ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நில உடமை விவரங்களை விடுதல் இன்றி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பொதுசேவை மையத்தில், தங்கள் நில உடமை விவரங்களை இணைக்கப்பட்ட பின்னர், தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஏற்படுத்தப்படும். மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் பயன்பெற தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். இதற்காக ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. எனவே, வரும் 31ம் தேதிக்குள், தங்களது நில உடமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து, எவ்வித கட்டணமுமின்றி விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

 

Related Stories: