போச்சம்பள்ளி, மே 22: சந்தையில் உரிய விலை கிடைக்காததால், கனகாம்பரம் சாகுபடி செய்யும் பரப்பை விவசாயிகள் ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பரவலாக மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக குண்டுமல்லி, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகிறார்கள். இதனிடையே, மலர் சாகுபடியானது கிராமங்களில் தற்போது மலர் படிப்படியாக குறைந்து வருகிறது. போச்சம்பள்ளி தாலுகா குள்ளம்பட்டி, ஆலேரஹள்ளி, கண்ணன்டஹள்ளி, பாப்பாரப்பட்டி, பெரியபுளியம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் அதகளவில் மலர் சாகுபடி செய்து வருகிறார்கள்.
கனகாம்பரம் பூவை பொறுத்தவரை சிவப்பு, ஆரஞ்சு, டெல்லி கனகாம்பரம், பச்சை கனகாரம் உள்ளிட்ட வகைகள் உள்ளன. இதில் பச்சை கனகாரம்பரம் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. ஆரஞ்சு கனகாரத்தை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற வானிலை காரணமாக செடிகளில் பூக்களின் உற்பத்தி அதிகரித்து, சந்தைக்கு வரத்து பல மடங்கு அதிகரித்ததால், விலை சரிந்தது. கடந்த காலங்களில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடியில் ஆர்வம் காட்டி அதிகளவில் செடி நட்டு பராமரித்து வந்தனர்.
அதை தொடர்ந்து, போதிய மழையில்லாமல் வெயிலால் பூக்கள் சுருங்கி பூப்பதால், வேறு வழியின்றி அதை அறுவடை செய்து மார்கெட்டிற்கு விற்பனை அனுப்பி வருகின்றனர். இந்த பூக்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டமடைந்து வருகின்றனர். இந்நிலையில், விவசாய வேலைக்கு தொழிலாளர்கள் கிடைப்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மலர் சாகுபடியில் பூக்களை தினமும் காலையில் பறித்து உடனே மார்கெட்டுக்கு அனுப்பவேண்டிய நிலை உள்ளது. ஆனால், போதுமான எண்ணிக்கையில் விவசாய தொழிலாளர்கள் கிடைக்காத போது, மலர்களை பறிக்காமல் செடியிலேயே விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இல்லாவிட்டால் குடும்ப உறுப்பினர்களை கொண்டு மலர்களை பறித்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த சூழ்நிலை எல்லோருக்கும் சாதமாக இருப்பதில்லை. இதற்கு தினமும் அதிகாலையில் வந்து, வேலையை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இதனால் விவசாய கூலி வேலைக்கு வருவதற்கு பலரும் விரும்புவதில்லை. இதனால் கனகாம்பரம் சாகுபடி பரப்பை விவசாயிகள் குறைத்து வருகின்றனர். இது குறித்து சந்தம்பட்டியை சேர்ந்த விவசாயி சக்திவேல் கூறுகையில், `கனகாம்பரத்துக்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், பூக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது அதே நேரம், முகூர்த்த நாட்கள் இல்லாததால் பூக்களுக்கான தேவை குறைந்துள்ளது.
மேலும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக, பூக்களை உடனடியாக விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சந்தைக்கு வரத்து அதிரிப்பால் விலை குறைந்துள்ளது. ஓசூர் சந்தையில் கடந்த மாதம் கனகாம்பரம் கிலோ ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. சாகுபடிக்கு உரம், பூச்சிகொல்லி மருந்துகள் மற்றும் தினசரி பூக்களை பறிக்க கூலி ஆட்கள் என செலவு அதிகரித்துள்ளது. தற்போதைய விலையால் பூக்கள் பறிப்பு கூலி கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலரும் தொழிலாளர்ளை நம்பி இருக்காமல், தங்களால் முடிந்த அளவுக்கு மட்டுமே சாகுபடியை மேற்கொள்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், வரும் காலங்களில் மலர் சாகுபடி கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்,’ என்றார்.
