குமரியில் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை கடத்தல்: நுகர்பொருள் வாணிப அதிகாரிகள் 2 பேர், காவலாளி அதிரடி கைது: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

 

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகள் கடத்தப்பட்டு பதுக்கிய விவகாரத்தில் நுகர்பொருள் வாணிப கழக குடோன் அதிகாரிகள் 2 பேர், காவலாளி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அடுத்த கோவில்விளையில் ஒரு தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டு இருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளை குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சில நாட்களுக்கு முன் கைப்பற்றினர்.

இவை அனைத்தும் நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூட்டைகள் ஆகும். இது தொடர்பாக விசாரணை நடத்தி நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த சகாதேவன் (52), நாகர்கோவில் சரலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), நாகர்கோவில் மூவேந்தர் நகரை சேர்ந்த மோகன் (54) ஆகியோரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விசாரணையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் மூட்டைகளை சம்பந்தப்பட்ட கடைக்கு கொண்டு செல்லாமல் இடைவெளியில் கடத்தல் கும்பலிடம் கைமாற்றி விட்டுள்ளனர். இவற்றில் கோதுமையை ரைஸ் மில்லில் மாவாக அரைத்து பாக்கெட் ஆக்கி விற்பனை செய்ததாகவும், அரிசியை பாலிஷ் செய்து, கேரளாவுக்கு கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட அரிசி, கோதுமை மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக முத்திரையுடன் இருந்ததால் அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்பு இல்லாமல் இவை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என உறுதி செய்த போலீசார், இது ெதாடர்பாக கைதானவர்களிடம் விசாரித்தனர். அப்போது நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழக குடோனில் பணியாற்றும் 2 முக்கிய அதிகாரிகளுக்கு ெதாடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் விசாரணை நடத்திய உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஜூனியர் குவாலிட்டி ஆய்வாளர் ரமேஷ், ஜூனியர் அசிஸ்டென்ட் ( பாயிண்ட் கிளார்க்) செந்தில்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே கைதானவர்களில் சகாதேவனுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இதே போல் நேற்று நுகர்பொருள் வாணிப கழக குடோன் காவலாளிகளில் ஒருவரான பாபு என்பவரையும் கைது செய்தனர். இதுவரை இந்த சம்பவத்தில் 3 வியாபாரிகள், நுகர்பொருள் வாணிப கழக குடோனில் பணியாற்றும் 2 அதிகாரிகள், ஒரு காவலாளி என 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 4 லோடுமேன்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.

* போலீஸ் குவிப்பு

நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், காவலாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து லோடுமேன்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்றும், அந்த சமயத்தில் லோடுமேன்கள் லோடு ஏற்றாமல் போராட்டம் நடத்தலாம் என்ற தகவலால், கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் நேற்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் எந்த போராட்டமும் இல்லை. வழக்கம் போல் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து லோடுகள், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

* குண்டர் சட்டம் பாய்கிறது

அத்தியாவசிய உணவு கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ், ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. அதன்படி இந்த வழக்கில் கைதானவர்கள் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடங்கி உள்ளனர்.

Related Stories: