* டாக்டர்களை கைது செய்யக்கோரி சக மாணவிகள் கண்ணீர் மல்க 5 மணி நேரம் சாலை மறியல்
* கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
* 6 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டம்
* போலீசார் மாணவிகளை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயற்சித்ததால் பதற்றம்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலியானார். அவரது இறப்புக்கு காரணமான டாக்டர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவிகள் கண்ணீர் மல்க சாலை மறியலில் ஈடுபட்டு, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்த முயற்சித்ததால் பதற்றம் நீடிக்கிறது. இதனால் மருத்துவமனை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. விவசாய கூலி தொழிலாளர்கள். இவர்களது மகள் சீதாலட்சுமி (21). இவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் அரசு செவிலியர் (டிப்ளமோ நர்சிங்) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படிப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்த கல்லூரியில் 3 ஆண்டுகளையும் சேர்த்து 350க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவிகள் நர்சிங் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி சீதாலட்சுமிக்கு மூக்கில் சதை வளர்ச்சி பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தான் படிக்கும் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக கடந்த 21ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூக்கில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. முன்னதாக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, மயக்க மருந்து சற்று அதிகமாக கொடுத்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு (22ம்தேதி) திடீரென மாணவி உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியின் பெற்றோர், உறவினர்கள், சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, நேற்று காலை 7.30 மணியளவில் மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் முன் திரண்டு நர்சிங் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் தான் சீதாலட்சுமி இறந்துள்ளார். டாக்டர்களின் தவறான சிகிச்சையே சீதாலட்சுமியின் உயிரிழப்பிற்கு காரணம். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட டாக்டர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சுமார் 40 மாணவிகள் ஒரு பிரிவாக பிரிந்து, மருத்துவமனையில் இருந்து கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அவர்களிடம் ஆர்டிஓ சாலை தவவாளன், திருச்சி துணை போலீஸ் கமிஷனர் சிருஷ்டி சிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, புகார் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதனிடையே மருத்துவமனையில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த மாணவிகளில் 50க்கும் மேற்பட்டோர் ரோட்டில் மறியல் செய்ய வெளியே ஓடி வந்தனர். இதைப்பார்த்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மெயின் கேட்டை மூட முயன்றனர். ஆனாலும் மாணவிகள் முண்டியடித்துக்கொண்டு மெயின் ரோட்டுக்கு வந்து அரசு மருத்துவமனை முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திரும்பிய மாணவிகளும், அரசு மருத்துவமனைக்குள் இருந்த எஞ்சிய மாணவிகளும் மறியலில் கலந்து கொண்டனர். சுமார் 200 மாணவிகள் காலை 8 மணியில் இருந்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மருத்துவமனை முதல்வர் குமரவேல் நேரில் வந்து சீதாலட்சுமி இறப்புக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
இந்த நிலையில், துணை சபாநாயகர் ரவிசங்கர், அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், போலீஸ் துணை கமிஷனர் சிருஷ்டி சிங், கல்லூரி டீன் குமரவேல் ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்தது.
தவறு செய்த டாக்டர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்த முயற்சித்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து நடவடிக்கை எடுக்க மாலை 6 மணி வரை அதிகாரிகள் அவகாசம் கேட்டனர்.
இதனால் மறியலை கைவிடுவதாகவும், ஆனால் மாலை வரை இங்கு தான் இருப்போம் என்று கூறி மாணவிகள் பகல் 12 மணி முதல் மருத்துவமனை நுழைவு கேட் ஓரத்தில் அமர்ந்தனர். மாணவிகள் போராட்டத்தால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை வரை அமர்ந்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதைதொடர்ந்து, நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிபிஐ, சிபிஎம், மக்கள் அதிகாரம், இந்திய மாணவர் அமைப்பு சங்கத்தினர் பங்கேற்றனர். தொடர்ந்து, அரசுக்கு எதிராகவும், சிங்கப்பெண் அதிரடி படை என்னாச்சு என கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இந்த சமயத்தில் சென்னையில் இருந்து மருத்துவ குழுவினர் அங்கு வந்து மாணவிகளிடம், விசாரணையை தொடங்கி விட்டோம். 3 நாளில் அறிக்கை கொடுப்போம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மேலும், மாணவிகள் 10 பேரை திருச்சி கலெக்டர் சரவணனை சந்திக்க போலீசார் அழைத்து சென்றனர். சுமார் 12 மணி நேரம் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ‘யாருக்கும் தெரியாம எடுத்துட்டு போக சொல்லி மிரட்டுனாங்க’
மாணவியின் உறவினர் குமார் கூறுகையில், ‘‘மாணவி எப்போது இறந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த பிறகு தையல் போட்டுள்ளனர். யாருக்கும் தெரியாமல் உடலை தூக்கி செல்லுங்கள் என்றனர். தெரியாமல் நடந்து விட்டது என டாக்டர்கள் சொன்னால் என்ன அர்த்தம்’’என்றார். உறவினர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ எந்த பிரச்னையும் செய்யாமல் உடலை எடுத்து செல்லும்படி கூறினர். அமைதியான முறையில் போராடுகிறோம்.
எங்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறும்போது, உடற்கூறாய்வு எங்கு செய்தாலும் மதுரையில் இருந்து தான் வருவார்கள். நாங்கள் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறோம். அது தான் வரும். சிஎம் ஆபீஸ்க்கு போன் செய்து தகவலை தெரிவித்து உள்ளோம்’’ என்றார். சில மாணவிகள் கூறுகையில், ‘நாங்கள் கலெக்டர் ஆபீஸ் சென்றபோது கேட்டை மூடி உள்ளே அனுமதிக்கவிலை. காவலர் ஒருவர் செருப்பு பிஞ்சுறும் என்றார். மாணவிக்கு நீதி வேண்டும், இதை கேட்டால் மதிப்பெண்ணில் கைவைத்துவிடுவேன் என்கின்றனர்’என்றனர்.
* போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த நிர்வாகம்
மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில், சீதாலட்சுமி நேற்றே (நேற்று முன்தினம்) இறந்து விட்டார். இன்று (நேற்று) காலை தான் அவர் இறந்ததாக கூறுகின்றனர். போராட்டத்தை கைவிடாவிட்டால் மாணவிகளின் மதிப்பெண்களில் கை வைப்பதாக மருத்துவமனை நிர்வாகம் மிரட்டுகிறது. போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதால், இன்னும் 50 மாணவிகளை வெளியே விடாமல் அவர்களது அறைகளில் பூட்டி வைத்துள்ளனர் என்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்திய மாணவிகளில் 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். காலை முதல் சாப்பிடாமல் இருந்ததால் மயங்கியதாக கூறப்பட்டது. அருகில் இருந்த மாணவிகள் தண்ணீர் கொடுத்து, 2 பேரையும் தேற்றினர். ஆனாலும் 2 மாணவிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* தோழிய கொன்னுட்டாங்க… பார்க்க கூட அனுமதிக்கல: மாணவிகள் குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்ட சக மாணவிகள் கூறுகையில், ‘‘எங்களை மாணவியை பார்க்க ஏன் அனுமதிக்கவில்லை. முதலில் ஹார்ட் பிரச்னை என்று சொன்னார்கள். அடுத்து மன அழுத்தம் என்றார்கள். சிகிச்சையின்போது யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. வார்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். ரத்தம் வெளியேறியுள்ளது. மருத்துவ சிகிச்சை விவரம் குறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை. எங்களுடைய தோழியை அவர்கள் கொன்று விட்டார்கள் சார் (இவ்வாறு கூறி கதறி அழுதனர்).
சிகிச்சை அளிக்கும் போது எங்களை அவர்கள் உள்ளே விடவில்லை. சம்பளம் இல்லாத வேலைக்காரி போல் பணியாற்றி வருகிறோம். டீன் எங்களிடம் வந்து ஆறுதல் கூட கூறவில்லை. அறுவை சிகிச்சை செய்யும் இடத்தில் நடக்க வேண்டிய நடைமுறைகள் அனைத்தும் மயக்க மருந்து அளிக்கும் அறையில் வைத்து நடைபெற்றுள்ளது. இதுவும் முறையாக நடைபெறவில்லை. அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. நர்ஸ் இல்லாமல் மருத்துவமனை இயங்கும் என்று கூறினர். சீதாலட்சுமி என்ற பெயர் கூட மாணவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும்போது பதிவேட்டில் சரியாக பதிவு செய்யவில்லை. வெறும் சீதா என்று மட்டும் பதிவு செய்திருந்தனர்.
சிகிச்சைக்கு சேர்க்கும்போது சக மாணவிகள் எங்களை கூட உள்ளே அனுமதிக்கவில்லை. அதேபோல மருத்துவம் பயிலும் மாணவர்கள், மருத்துவர்கள் என அவர்களுக்கு தனி மரியாதையும் செவிலியர் பிரிவில் படிக்கும் மாணவர் முதல் மற்றும் ஆய்வக வல்லுனர்களுக்கு வேறு விதமான மரியாதையும் வழங்கப்படுகிறது. எங்களை சரியாக நடத்த மாட்டார்கள். இவ்வாறு கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சீதாலட்சுமியை இழந்து விட்டோம். இதற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் புலம்பினர். இவர்களது அழுகை, காண்போரையும் கண் கலங்க செய்தது.
* 4 பேர் கொண்ட விசாரணை குழு: அரசு உத்தரவு
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தது தொடர்பாக உடனடியாக 4 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் தலைமையில் டாக்டர் பாரதி மோகன் (பேராசிரியர், காது மூக்கு தொண்டை பிரிவு), டாக்டர் சண்முகசுந்தரம் (பேராசிரியர், மயக்கவியல் பிரிவு), டாக்டர் ஜெயபிரகாஷ் (பேராசிரியர், பொது மருத்துவப் பிரிவு) ஆகியோர் குழுவில் இடம்பெறுள்ளனர்
இந்த விசாரணைக் குழுவினர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவக் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட மாணவிக்கு ஏற்பட்ட மருத்துவ பாதிப்புகள் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* யார் மீது தவறு இருந்தாலும் நடவடிக்கை – அமைச்சர் அருண்ராஜ்
திருச்செங்கோட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி அரசு மருத்துவமனையில், மூன்றாம் ஆண்டு நர்சிங் மாணவி உயிரிழப்பு சம்பந்தமாக, கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கரன் தலைமையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தும். அந்த குழுவின் அறிக்கையை பொறுத்து, யார் மீது தவறு இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு, அரசு சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* மாணவிகளை அநாகரீகமாக பேசிய போலீஸ் – அமைச்சர் ஒப்புதல்
திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் அமைச்சர் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் மயக்க மருந்து துறையை சார்ந்த 4 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திருச்சி வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளின் கல்வியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்களை காவல் துறை அதிகாரிகள் அநாகரீக வார்த்தைகளில் பேசியதாக கூறப்படுகிறது. அது உண்மையாக இருப்பின் காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவத்துறை சார்ந்து ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க எந்த தயக்கமும் காட்டாது,’’என்றார்.
