தூத்துக்குடி: தமிழ்நாட்டை லாட்டரி குடும்பம் தான் இயக்கி ஆட்சி நடத்துகிறது என்று அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டி: புதிய கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தவர்கள், தங்களது கட்சியையே அதன் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கைப்பற்றி விடுவாரோ என்ற பயத்தில் உள்ளனர்.
தற்போது தமிழகத்தில் எந்த ஒரு அறிக்கையும் ஆதவ் அர்ஜுனா பெயரில்தான் வருகிறது. தமிழ்நாட்டை ஒரு லாட்டரி சீட்டு குடும்பம் தான் பின்புலத்திலிருந்து இயக்கி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மீண்டும் தமிழகத்தில் லாட்டரி சீட்டு கலாசாரம் வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் முன்பு கூறினார். ஆனால், இப்போது கோவையில் சிறுமி கொடூரக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னையில் நடக்கும் தொடர் குற்றங்கள் எனத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? என மக்கள் மன்றம் கேள்வி எழுப்புகிறது.
தவெக-வின் சாதாரண நிர்வாகிகள் கூட ரேஷன் கடைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சட்டவிரோதமாக ஆய்வு மேற்கொள்கிறார்கள். இதனைச் செய்யச் சொல்லி ஆதவ் அர்ஜுனா தான் உத்தரவிட்டிருப்பார் என்று தெரிகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆன்லைன் மூலமாக வழங்கப்படும் ரூ.100 தரிசன டிக்கெட்டுகளில் பல கோடி ரூபாய் மோசடிகள் நடைபெற்றுள்ளன.
இதில் தொடர்புடைய அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் புதிய அரசு உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மீதான சொத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஊடகங்களில் செய்திகள் வருவது போல, தற்போதைய சூழலில் அமலாக்கத்துறை எனக்கு எந்தவொரு புதிய விசாரணை நோட்டீசும் வழங்கவில்லை. எனக்கு எந்தவிதமான நெருக்கடியும் சட்டப்படியாகக் கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
