குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில் கடந்த 3 நாளில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை: டிஜிபி தகவல்

 

சென்னை: கடந்த 3 நாளில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் வசித்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அமைதியான, பொதுமக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டுமென்ற தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, ரவுடிகளின் நடவடிக்கைகள், போதை மருந்துப் பொருட்கள் பயன்பாடு மற்றும் இதர மனமயக்கப் போதைப் பொருட்களின் பயன்பாட்டினை சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டுமென்று காவல் துறை உறுதி பூண்டுள்ளது.

குற்றவாளிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துதல், குற்றச் செயல்களை திட்டமிட்டு நிறைவேற்றுகின்ற குழுக்களின் நடவடிக்கைகளை குலைத்தல் போன்ற உறுதியான நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொண்டு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு திறம்பட பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களாக அதுபோன்று எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, 15,349 ரவுடிகள் (12,650- வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் மற்றும் 2,699-வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள்) அடையாளம் காணப்பட்டு சோதனையிடப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணை காரணமாக, 3,246 ரவுடிகள் (வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் -2,468 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் -778) காவல் துறையினரால் பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்று வருவதுடன், அவர்களில் 844 (வரலாற்றுப் பதிவேடு ரவுடிகள் -488 மற்றும் வரலாற்றுப் பதிவுறா ரவுடிகள் -356) பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், காவல் துறையினால் மேற்கொள்ளப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிச்சந்தையில் ரூ.1,43,78,200 (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து மூன்று லட்சத்து எழுபத்தெட்டாயிரத்து இருநூறு மட்டும்) மதிப்புடைய 267.756 கிலோ கிராம்கள் எடையுடைய கஞ்சா மற்றும் 2,476 போதை மருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொது அமைதி மற்றும் குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல் மற்றும் அனைத்து வகையிலான குற்றச் செயல்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்கு எதிராக உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு காவல் துறை உறுதி பூண்டுள்ளது.

Related Stories: