கரூர் அருகே பரபரப்பு: விவசாயி மீது துப்பாக்கி சூடு முதுகில் 10 குண்டு பாய்ந்தது: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

 

கரூர்: கரூர் அருகே விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் உடலில் 10 குண்டுகள் பாய்ந்தது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் கருணகிரி(40). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வளையபட்டியில் உள்ளது. அங்கு இவரது சித்தப்பா தங்கி வேலை பார்த்து வருகிறார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் கருணகிரி சாப்பாடு கொடுக்க பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

வீட்டருகே உள்ள காப்புகாட்டையொட்டி சென்றபோது பின்னால் இருந்து திடீரென யாரோ துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது முதுகில் அடுத்தடுத்து 10 குண்டுகள் பாய்ந்தது. இதில் நிலைகுலைந்து பைக்கிலிருந்து அவர் கீழே சரிந்து விழுந்தார். நடுரோட்டில் துடிதுடித்த அவரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து, பாலவிடுதி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் முதுகில் பாய்ந்த குண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அகற்றப்பட்ட குண்டுகள் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவிலான பால்ரஸ் குண்டுகள் என தெரியவந்தது. ஒரு முறை சுட்டால் 10க்கும் மேற்பட்ட பால்ரஸ் குண்டுகள் துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும். இவை பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

எனவே இரவில் விலங்குகளை வேட்டையாட முயன்றபோது கருணகிரி மீது தவறுதலாக துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததா, அல்லது கொலை செய்யும் முயற்சியில் கருணகிரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி மீது நடந்த துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: