திருவாரூர் அருகே ஸ்டேரிங் கட்டானதால் தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்து வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது: மூதாட்டி பலி: 9 பேர் படுகாயம்

 

திருவாரூர்: திருவாரூர் அருகே அரசு பேருந்தில் ஸ்டேரிங் கட்டானதால் தாறுமாறாக ஓடி வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் மூதாட்டி ஒருவர் பலியானார். 9 பேர் படுகாயம் அடைந்தனர். திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு நேற்று அரசு பேருந்து ஒன்று 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் என்ற பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தின் உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பெண்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விசாரணையில் அரசு பேருந்தின் ஸ்டேரிங் உடைந்த காரணத்தால் விபத்து நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. ஆனால் புதிய பேருந்தில் ஸ்டேரிங் எப்படி கட் ஆகும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி(88) என்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதி 9 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

* நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் அவர்களை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவரது செல்போன் வாயிலாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் பேசினார்.

அப்போது பயணிகளின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கட்சி சார்பாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படியும் அறிவுறுத்தினார்.

Related Stories: