தமிழகம் முழுவதும் தற்போது வரை 436 டாஸ்மாக் கடைகள் மூடல்: அமைச்சர் விக்னேஷ் தகவல்

 

சென்னை: தமிழகம் முழுவதும் தற்போது வரை 436 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூடிட அரசாணை பிறப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தமிழ்நாடு மாநில வாணிப கழக தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் தற்போது வரை 436 மதுபான சில்லரை விற்பனை கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மூடப்பட்ட மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணிபுரிந்து வந்த கடைப்பணியாளர்களின் நலன் பாதிக்கப்படாத வகையில் அருகிலுள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மீள பணியமர்த்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் அனைத்து மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் கடைப்பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார்.

Related Stories: