* திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கடும் கண்டனம்
* ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க தவெகவிற்கு அறிவுறுத்தல்
சென்னை: சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல் நம்பியவர்களுக்கு துரோகமிழைக்கும் அறமில்லாத கட்சி காங்கிரஸ் என்று திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுக இளைஞர் அணி மாவட்ட-மாநகர-மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக இளைஞர் அணி செயலாளர் தலைமை தாங்கினார். இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், 2026 தேர்தல் களத்தில், தாய்க் கழகத்துடன் இணைந்து ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த கூட்டம் மனமார்ந்த பாராட்டும், நன்றியையும் தெரிவிக்கிறது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வழங்கி, வழிநடத்தும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிதெரிவித்துக்கொள்கிறது.
ஜூன் – 3 கலைஞரின் பிறந்த நாள் விழாவை, திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்களில் மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாடுவது, கடந்த பல தேர்தல்களிலும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். நடந்து முடிந்த தேர்தலிலும் திமுகவினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர்.
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்த கூட்டம் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
திமுக அரசு மீது விஷம மற்றும் பொய் பிரசாரம் செய்து, சேற்றை வாரி வீசியவர்கள் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற 13 நாளிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன. ஆனால், முதல்வர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், பேட்டரி காரில் பவனி வந்தார் என்ற ரீல்ஸ்களால் இவற்றை திசை திருப்ப பார்க்கிறார்கள். இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக முதல்வர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பது உள்பட 9 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
* இளைஞர்கள்தான் திமுகவின் எதிர்காலம்: மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ்தள பதிவு: திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம், இனி நம் Plan and execution-ஐ upgrade செய்வோம். ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள், புதிய வரலாற்றை எழுதுவோம்.
